Published : 10 Oct 2017 09:57 AM
Last Updated : 10 Oct 2017 09:57 AM

பள்ளியில் 7 வயது சிறுவன் கொலை எதிரொலி மாணவர்களை பாதுகாக்க விதிமுறை: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக அக்டோபர் 30-ம் தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்கும்படியும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் ரியான் சர்வதேச பள்ளியில் கடந்த மாதம் 7 வயது சிறுவன் கழிவறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சிறுவன் மறுத்ததால் பள்ளியின் பஸ் டிரைவர் அவனைக் கொன்றது தெரியவந்தது. இதனிடையே, அபா சர்மா, சங்கீதா பாரதி ஆகிய 2 பெண் வழக்கறிஞர்கள், பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு எதிரான சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு விதிமுறைகளை வகுக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு, மனு மீது 3 வாரத்தில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக அக்டோபர் 30-ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விதிமுறைகளை உருவாக்கும்போது மாணவர்கள் எந்த அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x