எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுக்கு தொலைநோக்கு பார்வை கிடையாது: ராஜஸ்தான் நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கருத்து

ராஜஸ்தானின் நந்தட்வாரா பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் உடன் உள்ளனர்.
ராஜஸ்தானின் நந்தட்வாரா பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் உடன் உள்ளனர்.
Updated on
1 min read

ராஜ்சமந்த்: ‘‘எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுக்கு தொலைநோக்கு பார்வை கிடையாது’’ என ராஜஸ்தானில் நேற்று நடந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.

ராஜஸ்தானில் ரூ.5,500 கோடி மதிப்பிலான சாலை, ரயில்வே உள்ளிட்ட நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நத்தட்வாரா பகுதிக்கு சென்றார். அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் வரவேற்றனர். இந்தாண்டில் 3-வது முறையாக பிரதமர் மோடி ராஜஸ்தான் சென்றார். நத்தட்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் அவர் வழிபட்டார். தான் செல்லும் வழியில் நின்றிருந்த மக்களை நோக்கி அவர் பூக்களை தூவினார். ராஜ்சமந்த் மற்றும் உதய்பூரில் இருவழிப்பாதையை மேம்படுத்துவதற்கான சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உதய்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு மற்றும் வழித்தட மாற்றுத்திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். மேலும், 3 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்

நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ராஜஸ்தானில் ரூ.5,500 கோடிக்கு மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளேன். இந்த வளர்ச்சி திட்டங்களுக்காக ராஜஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்கள். ராஜஸ்தானுக்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. மாநிலத்தின் வளர்ச்சியுடன் நாட்டின் வளர்ச்சி உள்ளதாக மத்திய அரசு நம்புகிறது. எளிதான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக நாம் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குகிறோம்.

கடந்த காலத்தின் குறுகிய சிந்தனை, நாட்டிற்கு பெரும் செலவில் உள்கட்டமைப்பு கட்டுமானத்தை புறக்கணிக்க வழிவகுத்தது. நம்நாட்டில் போதிய அளவுக்கு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டிருந்திருந்தால், தற்போது மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. எல்லா வீடுகளுக்கும் தண்ணீர் கிடைத்திருந்தால், நாம் ரூ.3.5 லட்சம் கோடி செலவில் ஜல் ஜீவன் திட்டத்தை தொடங்க வேண்டியிருந்திருக்காது. எதிர்மறை எண்ணம் கொண்ட வர்களுக்கு தொலைநோக்கு பார்வை கிடையாது. அவர்களால் அரசியல் நலனுக்கு அப்பால் சிந்திக்க முடியாது.

25 ஆண்டுகளில் வளர்ச்சி

விரைவான வளர்ச்சிக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன உள்கட்டமைப்பு அவசியம். சிலர் அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களால் நாட்டில் நடைபெறும் நல்ல விஷயங்களை பார்க்க முடியாது. அவர்கள் சர்ச்சையை உருவாக்கத்தான் விரும்புவர். அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நவீன உள்கட்டமைப்பு பின்புலமாக உருவாகி வருகிறது. 100 சதவீத மின்மயமாக்கப்பட்ட ரயில் சேவையுடன் கூடிய மாநில மாக ராஜஸ்தான் விரைவில் மாறும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in