Last Updated : 15 Oct, 2017 03:55 PM

 

Published : 15 Oct 2017 03:55 PM
Last Updated : 15 Oct 2017 03:55 PM

ஜே.என்.யு மாணவர் நஜீப் காணாமல் போய் ஓராண்டாகியும் துப்புக் கிடைக்காமல் திணறும் சிபிஐ

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பயோடெக்னாலஜி முதுகலை மாணவர் நஜீப் அஹ்மட் அக்டோபர் 15, 2016-ல் மாஹி-மாண்ட்வி விடுதியிலிருந்து மாயமானார். இன்று வரை இவர் என்ன ஆனார் என்பது பற்றி எந்தவித துப்பும் கிடைக்காமல் திணறி வருகிறது சிபிஐ.

நகர போலீசாரிடமிருந்து சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. ஆனால் இன்று வரை மாயமான நஜீப் பற்றி எந்த வித துப்பும் கிடைக்கவில்லை. அந்தத் தருணத்தில்தான் ஜேஎன்யூவில் மாணவர்களின் இரு குழுக்களிடையே கடுமையான விரோதப்போக்கு இருந்து வந்தது.

டெல்லி போலீஸிடம் டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணை பற்றி எந்த வித முன்னேற்றத்தையும் காணாததையடுத்து இந்த ஆண்டு மே மாதம் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது.

நஜீபைப் பிரிந்து குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில் உள்ளனர், இவர்களும் தங்கள் பங்குக்கு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

நஜீப் அப்போது மற்றொரு மாணவர் அமைப்பான அகில்பாரதிய வித்தியார்த்தி பரிஷத் மாணவர்களுடன் கடும் கருத்து வேறுபாடுகள், மோதல்களைக் கொண்டிருந்தார். குடும்பத்தினர் இந்தத் தகராறுதான் நஜீப் மாயமானதற்கு மூல காரணம் என்று நம்புகின்றனர்.

நஜீப் காணாமல் போனதையடுத்து குடும்பத்தினர் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியதையடுத்து, டெல்லி போலீஸுக்கு அரசியல் தடைகளைத் தாண்டி விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. தேசியத் தலைநகரிலிருந்து ஒருவரும் சுவடின்றி இப்படி மாயமாக வழியில்லை என்றும் உயர் நீதிமன்றம் போலீஸை நெருக்கியது.

ஆனாலும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் பல்கலைக் கழக வளாகத்தையே முற்றிலும் மோப்ப நாய்களைக் கொண்டு சோதனை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆனால் இதுவும் கைகொடுக்கவில்லை.

இதனையடுத்து நஜீப் மாயத்திற்குப் பின்னால் இருக்கலாம் என்று சந்தேகித்த 9 மாணவர்களை உண்மையறியும் சோதனை செய்யுமாறு அறிவுறித்தியது. ஆனால் இந்த உத்தரவைப் புறக்கணித்த அந்த 9 மாணவர்களும் விசாரணை நீதிமன்றத்தில் இந்த முடிவை எதிர்த்து மனு செய்தனர்.

இதே சமயத்தில் உ.பி. பதாவ்னில் உள்ள வீட்டிற்கு போலீஸார் அதிகாலை வந்து குடும்பத்தினரை துன்புறுத்துவதாக நீதிமன்றத்திடம் முறையீடு எழுந்தது.

உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை நெருக்கமாகக் கண்காணித்து வரும் நிலையில் உண்மையறியும் சோதனையை எதிர்த்து 9 மாணவர்கள் செய்த மனுவை கோர்ட் நிராகரித்தது. ஆனால் சில நாட்களிலேயே மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டின் இந்த முடிவை ரத்து செய்தது அமர்வு நீதிமன்றம் பிறகு உண்மை அறியும் சோதனை நடத்தக்கூடாது என்றே கூறிவிட்டது அமர்வு நீதிமன்றம்.

விசாரணை ஒருபுறம் தொடர, நஜீபை விடுதலை செய்ய ரூ.20 லட்சம் கொடுங்கள் என்று மிரட்டிய நபர் ஒருவரை போலீஸார் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இத்தனை நடந்த பிறகு கடைசியில் இந்த ஆண்டு மே மாதம்தான் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு ஒருமாதம் கழித்து சிபிஐ விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து ஒரு அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, ஆனால் நீதிபதிகள் ‘கேளிக்கைக்காக இந்த வழக்கு உங்களிடம் மாற்றப்படவில்லை’ என்று கடிந்து கொண்டு அறிக்கையை நிராகரித்தது.

செப்.6-ம் தேதி கோர்ட் மீண்டும் நஜீபை கண்டுபிடிக்குமாறு சிபிஐக்கு அழுத்தம் கொடுக்க, இம்முறை விசார்ணை நிலைத்தகவல் அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் சிபிஐ சமர்ப்பித்தது.

அதில் ஜேஎன்யு அதிகாரிகள், ஆசிரியர்கள், நஜீபின் நண்பர்கள், சகாக்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதாகவும் இந்த விவகாரம் 12 நகரங்களில் பெரிய அளவில் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு நகர பிணக்கிடங்கையும் கூட நெருக்கமாக கவனித்து வருவதாகவும் அறிக்கை தாக்கல் செய்தது.

மீண்டும் நாளை (அக்.16) விசாரணை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x