

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: 5 மணி வரை 65.69% வாக்குப்பதிவு: கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கடைசியாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குப்பதியிருந்தன. காலையிலிருந்தே பிரபங்களும், அரசியல் தலைவர்களும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
கர்நாடகாவில் இந்தமுறை பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 217 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை மே 13 தேதி நடைபெற இருக்கிறது.
சாலைகளை விரைந்து சரி செய்யவேண்டும்: முதல்வர்: "தோண்டப்படும் சாலைகள் விரைந்து சரிசெய்யப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், புதன்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர், தோண்டப்படும் சாலைகள் விரைந்து சரிசெய்யப்பட வேண்டும். இதனை பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மட்டுமல்ல, அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிக்கப்பட வேண்டும். சென்னை புறநகர்ப் பகுதிகளில் செயல்படுத்தப்படக்கூடிய திட்டப் பணிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்திட வேண்டும் என்று கூறினார்.
அண்ணாமலை மீது முதல்வர் அவதூறு வழக்கு தாக்கல்: திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்றும், தனது ரபேல் வாட்ச் தொடர்பான விவரங்கள் என்றும் சில தகவல்களை www.enmannenmakkal.com என்ற இணையதளத்தில் சமீபத்தில் அண்ணாமலை வெளியிட்டார். அவர் வெளியிட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று திமுக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பினார். அதேபோல், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார்.
உதவி இயக்குனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏப்ரல் 30-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலக்குழி மரணம் என்ற தலைப்பில் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வெளியிட்டு பேசினார்.
இந்த பேச்சு இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறி இந்து முன்னணி அமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் இந்துக் கடவுள்களை இழிபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கிடையில், "சமூகத்தைத் துண்டாட நினைக்கும் பாசிசவாதிகளும், மதவாதிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து முற்றாய் தப்பித்துப் போகையில், சமூக அநீதிக்கு எதிராகப் பேசுவோர் மீது அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் பாய்ச்சப்படுமென்றால், நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
விஏஓ கொலை வழக்கை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முறப்பாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கை 4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என போலீஸ் மற்றும் கீழமை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நல்லதை பார்க்க முடியாது’: அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை ஒருபோதும் பார்க்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் நத்வாராவில் நடந்த விழாவில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி புதன்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பிதமர்,"எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களால் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்க முடியாது. அவர்களுக்கு அரசியல் நலனே முக்கியம். அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கலகத்தை மட்டுமே உருவாக்குவார்கள்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸுக்கு உரிமை இல்லை: நிர்மலா சீதாராமன் காட்டம்: கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள ஜெயநகர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"நாட்டில் பணவீக்கம் அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் விமர்சிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தொடர்ந்து பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருந்தது. நான் ஒப்பீடு போட்டியை விரும்பவில்லை. ஆனால், 2014ல் இருந்து நரேந்திர மோடி அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கர்நாடகாவிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பசவராஜ் பொம்மை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பணவீக்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் மக்களோடு இருக்கிறோம். பணவீக்கம் குறைந்து வருகிறது. ஆனால், இது பற்றி கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இல்லை. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது பணவீக்கம் எப்படி இருந்தது என்பதை அவர்கள் பார்க்க வேண்டும்." என்றார்.
கேரளாவில் பெண் மருத்துவர் குத்திக் கொலை: கேரள மாநிலத்தில் இளம் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துவரப்பட்ட கைதியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்தவர் வந்தனா தாஸ். புதன்கிழமை அதிகாலையில் அவர் பணியில் இருந்த போது மருத்துவமனைக்கு போலீஸாரால் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்ட சந்தீப் என்ற கைதி கத்திரிக்கோலால் வந்தனா தாஸை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வந்தனா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
‘விரைவில் களத்திற்கு திரும்புவேன்’ - கே.எல்.ராகுல் உறுதி: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு வலது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும் களத்திற்கு திரும்புவதில் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
31 வயதான அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வழிநடத்தி வந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவர் காயமடைந்தார். அதனால் ஐபிஎல் சீசனின் எஞ்சிய போட்டிகள் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் விலகினார்.
பாகிஸ்தானில் கலவரக்கார்கள் 1,000 கைது: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக செவ்வாய்க்கிழமை அவர் ரேஞ்சர் எனப்படும் துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் நாட்டின் பல இடங்களில் வன்முறை அரங்கேறியது. இதனால் 1000-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.