Published : 10 May 2023 07:15 AM
Last Updated : 10 May 2023 07:15 AM
புதுடெல்லி: ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஒரே மாதிரியான சீருடையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
நியமன முறை எதுவாக இருந்தாலும் பிரிகேடியர் மற்றும் அதற்குமேல் ரேங்க் உள்ள அதிகாரிகளுக்கு பொதுவான சீருடையை ஆகஸ்ட் 1 முதல் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த ராணுவத் தளபதிகள் மாநாட்டின் போது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் நடத்திய விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவின் ஒரு பகுதியாக,மூத்த அதிகாரிகளின் தலைக்கவசம், தோள்பட்டை ரேங்க் பேட்ஜ்கள், கோர்ஜெட் பேட்ஜ்கள், பெல்ட் மற்றும் ஷுக்கள் ஆகியவை தரப்படுத்தப்படவுள்ளன. இது, இந்திய ராணுவத்தின் தன்மையை நியாயமான மற்றும் சமமான அமைப்பாக வலுப்படுத்தும்.
இந்திய ராணுவத்தின் உண்மையான நெறிமுறைகளை பிரதிபலிக்கும் அதே வேளையில், அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் பொதுவான அடையாளத்தை இந்த தரமான சீருடை உறுதி செய்யும். அதேவேளையில் இந்த புதியமுடிவால், கர்னல்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் அணியும் சீருடையில் எந்த மாற்றமும் இருக்காது. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
வெவ்வேறு வகையான சீருடைகள் இந்திய ராணுவத்தில் படைப்பிரிவுகள் மற்றும் சேவைகளுடன் குறிப்பிட்ட தொடர்பைக் கொண்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT