நீதிமன்றத்தை பொதுமக்களின் வீடுகளுக்கே அழைத்துச் சென்றுள்ளது நேரடி ஒளிபரப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பானது நீதிமன்றத்தை சாதாரண மக்களின் வீடுகள் மற்றும் இதயங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியாவில் தன்பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு முன், நேற்று 8-வது நாளாக வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.

மத்தியபிரதேசம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி வாதிடும்போது, “இந்த விவாதம் நாட்டின் பல்வேறு மூலைகளிலும் நேரலையில் ஒளிபரப்பாவதால் மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி சிந்திக்கிறார்கள்” என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி கூறும்போது, “நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு உண்மையில் எங்கள் நீதிமன்றத்தை சாதாரண மக்களின் வீடுகளுக்கும் அவர்களின் இதயங்களுக்கும் கொண்டு சென்றுள்ளது. நேரடி ஒளிபரப்பு நடைமுறைகளின் ஒருபகுதியாக இதனை நான் கருதுகிறேன்” என்றார்.

உடனே துவிவேதி கூறும்போது, “கிராமப்புற மக்களுக்கு புரியாத மொழியான ஆங்கிலத்தில் நீதிமன்ற வாதங்கள் இருப்பது மட்டுமே இதற்கு ஒரேவொரு தடையாக உள்ளது” என்றார்.

பிற மொழிகளில்..

இதற்கு தலைமை நீதிபதி கூறும்போது, “நாங்கள் அது தொடர்பாகவும் பணியாற்றி வருகிறோம். நேரடி ஒளிபரப்பின் உள்ளடக்கம் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளிலும் அதே நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்ய தொழில்நுட்பத்தை பயன்படுத்த முயன்று வருகிறோம்” என்றார்.

‘ஜாமியத்-உலமா-இ-ஹிந்த்’ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, “ஒருவர் ஆங்கிலத்தில் பேசுவதை ஜப்பானிய மொழி உட்பட பல்வேறு மொழிகளில் கேட்கும் தொழில்நுட்ப வசதி தற்போது உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in