Published : 10 May 2023 07:43 AM
Last Updated : 10 May 2023 07:43 AM
ஜெய்ப்பூர்: காஷ்மீரை தொடர்ந்து ராஜஸ்தானில் லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் நாட்டின் லித்தியம் தேவையில் 80 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும்.
மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதைவிட பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டது அறிவியல் வளர்ச்சியில் மிக முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது. தற்போது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர், மின்சார வாகனங்கள், விமான உற்பத்தி, சூரிய மின் தகடுகள் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களிலும் லித்தியம் வகை பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் அடுத்த 25 ஆண்டுகளில் லித்தியத்தின் தேவை 500 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்துக்கு இணையாக லித்தியத்துக்கு மதிப்பு அளிக்கப்படுவதால் அந்த தனிமம், ‘வெள்ளை தங்கம்' என்று அழைக்கப்படுகிறது.
சிலி, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, சீனா, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் லித்தியம் படிமம் அதிகமாக காணப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.6,000 கோடி மதிப்பிலான லித்தியத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் பாதிக்கும் மேல் சீனாவில் இருந்து வாங்கப்படுகிறது.
வரும் 2030-ம் ஆண்டில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை 14 லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த இலக்கை எட்ட லித்தியத்தை மிக அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம், சலால் ஹைமானா பகுதியில் லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 59 லட்சம் டன் அளவுக்கு லித்தியம் இருப்பதாக மத்திய சுரங்கத் துறை அறிவித்துள்ளது. விரைவில் அங்கு லித்தியத்தை வெட்டி எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ராஜஸ்தானின் டேகானா பகுதியில் உள்ள ரேவந்த் மலைப் பகுதியில் பெருமளவில் லித்தியம் படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1914-ம் ஆண்டில் ராஜஸ்தானின் டேகானா பகுதி, ரேவந்த் மலையில் டங்ஸ்டன் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து பெருமளவில் டங்ஸ்டன் தனிமம் வெட்டி எடுக்கப்பட்டது. இதனை ஆயுத தயாரிப்புக்கு ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதே பகுதியில் டங்ஸ்டன் தனிமம் எடுக்கப்பட்டது. இந்த தனிமம் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. சுமார் 1,500 பேர் அங்குள்ள சுரங்கத்தில் பணியாற்றி வந்தனர். சர்வதேச அரங்கில் சீனா மிகக் குறைந்த விலையில் டங்ஸ்டன் தனிமத்தை ஏற்றுமதி செய்ததால், இந்தியாவால் போட்டியை சமாளிக்க முடியவில்லை. ரேவந்த் மலையில் டங்ஸ்டன் தனிமத்தை வெட்டி எடுப்பதற்கான செலவு அதிகரித்ததால் கடந்த 1993-களில் சுரங்கம் மூடப்பட்டது.
அதே பகுதியில் உயர்தரமான டங்ஸ்டன் தனிமம் கிடைக்குமா என்பது தொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு துறை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக பெருமளவில் லித்தியம் படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லித்தியம் படிமத்தின் மூலம் நாட்டின் தேவையில் 80 சதவீதத்தைப் பூர்த்தி செய்ய முடியும்.
ராஜஸ்தானின் ஜெய்சல்மர், பார்மர் உள்ளிட்ட பகுதிகளிலும் லித்தியம் படிமம் இருப்பதற்காக சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த இடங்களிலும் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT