

பெங்களூரு: ‘‘கர்நாடகாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும்’’ என அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் கனவு எதுவோ, அதுவே எனது கனவு. கர்நாடகாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். குறிப்பாக இன்றைய தலைமுறையின் எதிர்காலத்தை மனதில் வைத்து உங்களை வேண்டுகிறேன்.
உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவை முதல் 3 இடங்களுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளோம். 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக கர்நாடகா வளரும்போதுதான் இது சாத்தியமாகும். முதலீடு, தொழில், கல்வி, வேலை வாய்ப்பில் கர்நாடகா முதலிடத்தில் இருக்க வேண்டும்.
கர்நாடகாவை, நாட்டிலே முதல் மாநிலமாக மாற்றுவதற்கு உங்கள் ஆசியை எதிர்பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் என் மீது அன்பை காட்டியுள்ளீர்கள். இதை தெய்வத்தின் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன். கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் நான் பெற்ற அன்பு ஈடு இணையற்றது. கரோனா காலத்தில் கூட பாஜக அரசு ரூ.90 ஆயிரம் கோடி அந்நிய முதலீட்டை ஈர்த்தது. இரட்டை இன்ஜின் அரசால் கர்நாடகா மிக வேகமாக முன்னேறியது. இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.