Last Updated : 07 Sep, 2017 10:11 AM

 

Published : 07 Sep 2017 10:11 AM
Last Updated : 07 Sep 2017 10:11 AM

மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை: பெங்களூருவில் கொலையாளிகளைப் பிடிக்க சிறப்பு படை அமைப்பு

மூத்த பத்திரிக்கையாளரும், இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் நேற்று மாலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு படையை அமைத்துள்ளது.

மறைந்த கன்னட எழுத்தாளரும், முற்போக்கு சிந்தனையாளருமான பி.லங்கேஷின் மகள் கவுரி லங்கேஷ் (55). இவர் பெங்களூருவில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் தனது தாய் இந்திராவுடன் வசித்து வந்தார். கன்னட வார இதழான லங்கேஷ் பத்திரிக்கையின் ஆசிரியரான இவர் இந்து மதத்தின் மனு தர்மத்தையும், சாதி அமைப்பையும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினரையும் கடுமையாக எதிர்த்து எழுதியதால், கவுரிக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்தன. நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோரைப் போல கொன்று விடுவதாக சமூக வலைத்தளங்களில் எச்சரித்தனர்.

இத்தகைய மிரட்டல்களை பொருட்படுத்தாமல் இருந்த கவுரிக்கு எதிராக 10-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை இந்துத்துவ அமைப்பினர் தொடுத்தனர். அண்மையில் பாஜக எம்பி பிரஹலாத் ஜோஷி தொடுத்த வழக்கில் இவருக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும், இந்துத்துவா அமைப்பினரையும் கவுரி துணிச்சலோடு விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு கவுரி பசவன்குடியில் உள்ள லங்கேஷ் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றார். இரவு 7:56 மணியளவில் வீட்டை அடைந்ததும் காரை நிறுத்திவிட்டு, நுழைவாயிலை திறக்க சென்றார். அப்போது மோட்டார் சைக்களில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் கவுரி லங்கேஷை துப்பாக்கியால் 3 முறை சுட்டனர். இதில் மார்பு, கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனடியாக கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடினர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து ஓடிவந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கவுரியின் உடலை கைப்பற்றி விக்டோரியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடனடியாக கவுரியின் வீட்டுக்கு வந்த உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சுனில் குமார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் கொலையாளிகள் தப்பி செல்லாதவாறு மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தினர். மேலும் சம்பவ இடத்தில் சிதறி கிடந்த 3 துப்பாக்கி குண்டுகள், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்தனர்.

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

பத்திரிகையாளர் கவுரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி உட்பட கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் பத்திரிக்கையாளர்களும், எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கவுரி லங்கேஷின் உடல் விக்டோரியா மருத்துவமனையில் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. உடலில் இருந்து 3 குண்டுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து அவரது உடல் சகோதரர் இந்திரஜித் லங்கேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. கவுரியின் உடலைப் பார்த்து அவரது தாய் இந்திரா, சகோதரி கவிதா உள்ளிட்ட குடும்பத்தினரும் நண்பர்களும் கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரவீந்திர கலாக்ஷேத்ராவில் வைக்கப்பட் டது.

சடங்குகள் கூடாது

எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். விடாமல் கொட்டிய கனமழையிலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் வரிசையில் நின்று கவுரியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் சாம்ராஜ் நகருக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் ஜெயசந்திரா, ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இறுதியாக கவுரியின் உடலை பார்த்து தாய் இந்திரா, சகோதரி கவிதா, சகோதரர் இந்திரஜித் உள்ளிட்டோரும், லங்கேஷ் பத்திரிக்கையின் ஊழியர்களும் கண்ணீர் விட்டு கதறினர். நடிகர் பிரகாஷ் ராஜ் உடனிருந்து கவுரி லங்கேஷ் குடும்பத்தினரை தேற்றினார். கவுரி பகுத்தறிவாளர் என்பதால் எவ்வித சடங்குகளும் மேற்கொள்ளக் கூடாது என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விசாரணை தொடக்கம்

செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறும்போது, “கவுரி லங்கேஷின் மரணம் தந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. நீண்ட காலமாக அவரை நன்றாக தெரியும். அவரது படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொலையாளிகளை நிச்சயம் தப்ப விடமாட்டோம். இது தொடர்பாக காலையில் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

ஒரு ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டுள்ளது. அவரது மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்படும். முதல் கட்டமாக கவுரியின் வீட்டுக்கு அருகேயுள்ள 30-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.இரவு நேரம் என்பதால், அதில் கொலையாளிகளின் படம் தெளிவாக பதிவாகவில்லை. கறுப்பு உடை அணிந்த கொலையாளிகள் ஹெல்மெட் அணிந்து வந்து, கவுரியை சுட்டுள்ளனர். கொலையாளிகள் எந்த வகையான துப்பாக்கியை பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய கர்நாடக அரசு தயாராக உள்ளது. எனினும் இப்போதைக்கு சிபிஐ விசாரணை தேவையில்லை” என்றார்.

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி பாணியில் மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய வழக்குகளில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், இவ்வழக்கில் போலீஸார் விரைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x