மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நந்தகுமாரின் ரூ.143 கோடி சொத்து முடக்கம்

நந்தகுமார்
நந்தகுமார்
Updated on
1 min read

புதுடெல்லி: மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்குச் சொந்தமான ரூ.143 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல், நந்தகுமார் அவரது மணப்புரம் அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனம் மூலம் பொதுமக்களிடமிருந்து விதிக்குப் புறம்பாக பணம் பெற்றதாகவும் அதை வசூலிக்க அவர் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் நந்தகுமாருக்குச் சொந்தமான 6 இடங்களில் சோதனை மேற்கொண்டது.

இதுகுறித்து அமலாக்கத் துறை கூறுகையில், “நந்தகுமார் அவரது மணப்புரம் அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனம் மூலம் விதிக்குப் புறம்பாக பொதுமக்களிடமிருந்து ரூ.143 கோடி வசூல் செய்துள்ளார். இதைக் கண்டறிந்த ரிசர்வ் வங்கி, இந்தத் தொகையை வாடிக்கையாளர்களிடம் திருப்பி அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பணத்தை வாடிக்கையாளர்களிடம் திருப்பி வழங்கிவிட்டதாக அவர் ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், பணத்தை திருப்பிச் செலுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை நந்தகுமார் அசையா சொத்துகளிலும் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் நந்தகுமாருக்குச் சொந்தமான ரூ.143 கோடி சொத்துகளையும் 8 வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளோம். இந்தச் சோதனையில் பலமுக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in