தேசியவாத காங். தலைவர் பதவி - ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறுவதாக சரத் பவார் அறிவிப்பு

சரத் பவார்
சரத் பவார்
Updated on
1 min read

மும்பை: கட்சித் தொண்டர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடரப்போவதாக சரத் பவார் தெரிவித்தார். முன்னதாக, காலையில் நடந்த கட்சிக் குழு கூட்டத்தில் சரத் பவாரின் ராஜினாமா நிராகரிக்கப்படுவதாகவும், அவரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவினை அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், "எனது ராஜினாமா அறிவிப்பினைத் தொடர்ந்து தொண்டர்களுக்குள்ளும் மக்களிடத்திலும் ஓர் அமைதியின்மை ஏற்பட்டது. எனது நலன் விரும்பிகள் இந்த முடிவினை மறுபிரிசீலனை செய்யுமாறு தெரிவித்தனர். மகாராஷ்டிரா மற்றும் நாடு முழுவதிலுமுள்ள எனது ஆதராவளர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் எனது இந்த முடிவினைத் திரும்பப் பெறவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த எல்லாக் காரணிகளையும் மனதில் கொண்டு நான் எனது முடிவினை மறுபரிசீலனை செய்துள்ளேன். அதன்படி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்வது என்று முடிவெடுத்துள்ளேன். எனது முந்தைய ராஜினாமா முடிவினைத் திரும்பப் பெறுகிறேன்" என்று தெரிவித்தார்.

கடந்த 1999-ம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் தொடங்கினார். அப்போது முதல் 24 ஆண்டுகள் வரை கட்சியின் தலைவராக அவர் செயல்பட்டார். இந்தச் சூழலில் கட்சியைக் கைப்பற்றுவதில் அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கும், அண்ணன் மகன் அஜித் பவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 40 எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் பாஜகவில் இணைய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதனால் தேசியவாத காங்கிரஸ் உடையும் சூழல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சரத் பவார், அஜித் பவாருக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதன் அடிப்படையில் பாஜகவில் இணையும் முடிவை அஜித் பவார் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை (மே 2) சரத் பவார் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸின் புதிய தலைவரை தேர்வு செய்ய கட்சியின் மூத்த உறுப்பினர்கள்15 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆலோசனை நடத்தி கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை கூடிய அந்தக்குழு, சரத் பவாரின் முடிவினை ஏற்க மறுத்து அவரே கட்சியின் தலைவராக தொடரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in