

புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது நேற்று புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அப்போது 849 மதுபான கடைகளுக்கு உரிமங்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதே விவகாரத்தில் அமலாக்கத் துறை சார்பில் கடந்த மார்ச் 9-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள பணப் பரிமாற்ற மோசடி தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் இதுவரை 4 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் அமலாக்கத் துறை சார்பில் மணிஷ் சிசோடியா மீது நேற்று புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை
முன்னதாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகளில் ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிசோடியா மனுக்களை தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிபதி எம்.கே.நாக்பால் கடந்த 28-ம் தேதி தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளில் ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா நேற்று முன்தினம் தனித்தனியாக ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தார். இரு மனுக்களும் நீதிபதி தினேஷ் குமார் சர்மா முன்பு விசாரணைக்கு வந்தன. மனைவியின் உடல்நிலையை காரணம் காட்டி சிசோடியா தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தினேஷ் குமார் சர்மா, எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டார்.
இதேபோல், அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கோரி மணிஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு தொடர்பாக அமலாக்கத் துறை விரிவான பதில் மனுதாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.