

கோரக்பூர்: உத்தரபிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் 37 மாவட்டங்களில் 10 மாநகராட்சி மேயர்கள், 820 கவுன்சிலர்கள் உள்ளிட்ட 7,593 பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான முதல்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் உள்ள தனது வாக்குச்சாவடியில் காலை 7.01 மணிக்கு முதல் ஆளாக வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தலில் வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் பொறுப்பும் ஆகும். தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. எனவே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பதிவில், “உ.பி.யில் இரட்டை இன்ஜின் பாஜக அரசை மூன்று இன்ஜின் பாஜக அரசாக மாற்றிட மக்கள் உதவ வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.