Last Updated : 05 May, 2023 05:57 AM

 

Published : 05 May 2023 05:57 AM
Last Updated : 05 May 2023 05:57 AM

உத்தர பிரதேச மாநிலத்தில் 39 வருடங்களுக்கு முன் பஜ்ரங்தளம் தொடங்க காரணமாக இருந்தது காங்கிரஸ்

புதுடெல்லி: காங்கிரஸ் தனது கர்நாடகா தேர்தல் அறிக்கையில் ‘பஜ்ரங்தளம் தடை செய்யப்படும்’ என்று கூறியிருப்பது சர்ச்சையாகிவிட்டது. ஆனால் 39 வருடங்களுக்கு முன் உ.பி.யில் இந்த அமைப்பு தொடங்கப்படுவதற்கு காங்கிரஸே காரணமாக இருந்தது.

உ.பி.யின் அயோத்தியில் ராமர் கோயில் போராட்டத்தை விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) கையில் எடுத்து நடத்தி வந்தது. இது, கடந்த 1984 அக்டோபரில் உ.பி.யில் ராமர்- ஜானகி யாத்திரை நடத்தியது. இதற்கு பாதுகாப்பு அளிக்கும்படி அப்போதைய காங்கிரஸ் அரசின் முதல்வரான நாரயண் தத் திவாரியிடம் கோரியது. இதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இதனால், கடும் கோபம் அடைந்த விஎச்பி.யின் சாதுக்கள், இந்து இளைஞர்கள் ஒன்றுகூடி பாதுகாப்பு அளிக்கும்படி அறிக்கை வெளியிட்டனர்.

இதனை ஏற்று, இந்துத்துவாவின் அதிரடி இளைஞராக இருந்த வினய் கட்டியார் தலைமையில் ஏராளமான இளைஞர்கள் ஒன்றுகூடி பஜ்ரங்தளம் எனும் பெயரில் இந்துத்துவா அமைப்பை தொடங்கினர். ராமரின் பாதுகாவலரான அனுமரைவட மாநிலங்களில் பஜ்ரங்பலி என்று அழைப்பதுண்டு. இந்தவகையில், இந்துத்துவா அமைப்புகளில் ஒன்றான இதற்கு பஜ்ரங்தளம் எனப் பெயரிடப்பட்டது.

அயோத்தியில் விஎச்பி கரசேவையால் 1992, டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் பஜ்ரங்தளத்தின் பங்கு முக்கியமானது. இதன் காரணமாக இந்த அமைப்பும், அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அரசால் தடைசெய்யப்பட்டது. இந்த தடை சுமார்ஒரு வருடத்திற்கு பின் நீக்கப்பட்டது.

இதையடுத்து, பஜ்ரங்தளம், உ.பி.க்கு வெளியே பிற மாநிலங்களிலும் தொடங்கப்பட்டு பலம் பெறத் தொடங்கியது. இதற்கு தற்போது குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் சேர்த்து நாடு முழுவதிலும் சுமார் 2,500 கிளைகள் உள்ளன.

கடந்த 1998-ல் குஜராத்தின் தென்கிழக்குப் பகுதியில் 12 கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. இதிலும் குஜராத்தில் 2002-ம்ஆண்டு மதக்கலவரத்திலும் பஜ்ரங்தளத்திற்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் கிளம்பின.

2006 ஏப்ரலில் மகாராஷ்டிராவின் நந்தத்தில் வெடிகுண்டு தயாரித்த 2 பஜ்ரங்தளம் தொண்டர்கள் உடல் சிதறி இறந்ததாக செய்திகள் வெளியாகின. தொடர்ந்து, உ.பி., டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களின் கலவரங்களிலும் பஜ்ரங்தளம் அமைப்பினர் மீது புகார்கள் எழுந்தன. குறிப்பாக 2008-ம் ஆண்டுக்குப் பிறகு ஒடிசா, கர்நாடகாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்தன.

இதனால், சமீபத்தில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பான பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு இணையாக பஜ்ரங்தளமும் பேசப்பட்டது.

இதற்குமுன், உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களால் 1977-ல்தொடங்கப்பட்ட சிமி 2001-ல் தடை செய்யப்பட்டது. இதையடுத்து, விஎச்பி.யுடன் பஜ்ரங்தளத்தையும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியது. அதன் பிறகு மீண்டும் காங்கிரஸ் தனது கர்நாடகா தேர்தல் அறிக்கையில் பஜ்ரங்தளம் தடையை குறிப்பிட்டது சர்ச்சையாகி உள்ளது.

இதற்காக, காங்கிரஸ் அலுவலகங்கள் முன் நாடு முழுவதிலும் பஜ்ரங்தளம் அமைப்பினர் போராட்டம் நடத்தத் தொடங்கி விட்டனர். அதேசமயம், இப்பிரச்சினையில் பாஜகவும் தமது பிரச்சாரத்தில் தேர்தல் ஆதாயம் தேடத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x