டெல்லி மதுபானக் கொள்கை மூலம் கிடைத்த லஞ்சப் பணத்தை கோவா தேர்தலுக்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை மூலமாக லஞ்சமாக பெற்ற ரூ.100 கோடி பணத்தை ஆம் ஆத்மி கட்சி, 2022-ம் ஆண்டில் நடைபெற்ற கோவா தேர்தலுக்கு பயன்படுத்தியுள்ளது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 800-க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமை வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும். அதில் ஆதாயம் அடைந்த மது விற்பனையாளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஊழல் வழக்கில் டெல்லியில் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினருமான கவிதாவுக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி அவரையும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ரூ.100 கோடி லஞ்சம்

இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக அமலாக்கத் துறை கூடுதல் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்துள்ளது. அதில், “மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தில் குறிப்பிட்ட பகுதியை ஆம் ஆத்மி கட்சி கோவா தேர்தலுக்கு பயன்படுத்தியுள்ளது. இந்தப் பணப் பரிமாற்றத்தில் ராஜேஷ் ஜோஷி மற்றும் அவரது ஷரியத் புரடெக்சன் நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்நிறுவனம் மூலமே ஊழல் பணம் ஆம் ஆத்மி கட்சிக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகள் வழியாக மட்டுமல்லாமல், ஹவாலா முறையிலும் பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. மொத்தத் தொகையில் ரூ.30 கோடி கோவா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in