

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச குழுவினர் இந்தியாவில் விசாரணை நடத்த அவர்களுக்கு விசா வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு வியாழக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது:
இலங்கையில் உள்நாட்டுப் போரில் இனப்படுகொலை செய்ததுடன் போர்க் குற்றங் களிலும் ஈடுபட்டு, தற்போது சிறுபான்மை தமிழர்களை பாரபட் சத்துடன் நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கருத்து தமிழக மக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மத்தியி லும் இருந்து வருகிறது. இலங்கை யில் சிறுபான்மை தமிழர்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படு வதையும், அவர்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்களையும் கண்டித்து ஏற்கெனவே தமிழக சட்டப்பேரவையில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பிரச்சினை தொடர்பாக முந்தைய பிரதமருக்கு நான் பலதடவை கடிதம் எழுதியும் உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. கடந்த மே மாதம் தங்கள் தலைமையில் மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறும் என்று நாங்கள் எல்லாம் நம்பிக்கை யோடு இருந்தோம். கடந்த ஜூன் 3-ம் தேதி நான் தங்களிடம் அளித்த கோரிக்கை மனுவில், இலங்கையில் வாழும் தமிழர்க ளுக்கு நீதி கிடைக்கும் வண்ணம், இனப்படுகொலையை கண்டித்து ஐ.நாவில் இந்தியா ஒரு தீர் மானத்தை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.
இத்தகைய சூழ்நிலையில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அமைக்கப் பட்டுள்ள ஐ.நா. விசாரணை குழுவினருக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்துவிட்டதாக ஊடகங்களில் செய்தி வந்திருப்பது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த செய்திகள் உண்மையாக இருக்குமாயின், தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கும். பூகோள ரீதியாக இலங்கைக்கு அருகில் உள்ள ஒரு நாடு என்ற வகையிலும், தமிழ்நாட்டில் எண்ணற்ற இலங்கை தமிழ் அகதிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற முறையிலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்டிப்பாக இந்தியாவில் விசாரணை நடத்தலாம்.
எனவே, தாங்கள் இந்த விஷ யத்தில் தலையிட்டு, சர்வதேச குழுவினருக்கு விசா கிடைக்கச் செய்யவும், இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நியாயமான, பாரபட்சமில்லாத விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதுதான், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் இருந்து வரும் உணர்வுகளை தணிப்பதாக அமையும்.