

புதுடெல்லி: இந்தியாவில் விவாகரத்து பெறுவதற்கான நடைமுறைகளை இந்து திருமண சட்டத்தின் 13பி பிரிவு வரையறுத்துள்ளது. இதில், தம்பதியினர் ஓராண்டு அல்லது அதற்கு மேல் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தாலோ அல்லது இனி சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என இருவரும் கருதினாலோ, 13பி(1) பிரிவின் கீழ் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யலாம்.
இதுபோல 13பி(2) பிரிவின் கீழ் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யும் தம்பதி குறைந்தபட்சம் 6 முதல் 18 மாதங்கள் வரை கட்டாயமாக காத்திருக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் மனம் மாறி மனுவை திரும்பப் பெற முடியும். கட்டாய காத்திருப்பு காலம் முடிந்ததும் குடும்பநல நீதிமன்றம் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கும். அதேநேரம் திருமணமாகி குறைந்தபட்சம் ஓராண்டு ஆகி இருக்க வேண்டும்.
இந்நிலையில், அரசியல் சாசன சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, விவாகரத்து வழங்கக் கோரி 2014-ம் ஆண்டு ஷில்பா சைலேஷ் - வருண் ஸ்ரீனிவாசன் தம்பதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங் மற்றும் ஆர்.பானுமதி அமர்வு கடந்த 2016-ம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
குடும்பநல நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிடாமல், விவாகரத்து வழங்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா? இந்து திருமண சட்டத்தின் 13பி(2)-ல் கூறப்பட்டுள்ள கட்டாய காத்திருப்பு காலத்தை உச்ச நீதிமன்றம் புறந்தள்ள முடியுமா? என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு ஆராய்ந்தது.இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, அபய் எஸ் ஓகா, விக்ரம்நாத் மற்றும் ஜே.கே.மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது: மீளவே முடியாத மண முறிவு என்ற சூழ்நிலையில் அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கலாம். மேலும் விவாகரத்து பெற தம்பதி இருவரும் பரஸ்பரம் சம்மதம் தெரிவித்தால் 6 மாத கட்டாய காத்திருப்பு காலம் அவசியம் இல்லை.
அதேநேரம் மீளவே முடியாத மண முறிவை தீர்மானிப்பதற்கான காரணிகளையும் நாங்கள் வகுத்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள எந்த ஒரு விஷயத்திலும், முழு நீதியை நிலைநாட்டுவது அவசியம் என கருதினால் அது தொடர்பாக ஆணைகள் மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்க அரசியல் சாசனத்தின் 142வது பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.