

திருமலை: கோடை விடுமுறையால் நாடு முழுவதிலுமுள்ள பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்து வருவதால் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமையில், கோடைகால ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அதிகாரி தர்மாரெட்டி பேசியதாவது:
தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் பக்தர்கள் கூட்டம் திருமலையில் அதிகரித்து விட்டது. இந்த நிலை வரும் ஜூலை மாதம் இறுதி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அதிகாரிகள் யாரும் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும். தேவைப்பட்டால் திருப்பதியில் உள்ள மேலும் சில கோயில்களில் பணியாற்றும் அதிகாரிகள் தற்காலிகமாக திருமலைக்கு வந்து பணியாற்றிட வேண்டும்.
அதிகாரிகள் மேற்பார்வை
ஒவ்வொரு துறையின் உயர் அதிகாரிகள், முக்கியமாக முடி காணிக்கை செலுத்தும் இடம், அன்ன தான மையம், லட்டு பிரசாத விநியோக மையங்களில் அடிக்கடி சென்று மேற்பார்வையிடுதல் அவசியம்.
கூடுதல் ஸ்ரீவாரி சேவகர்களை நியமனம் செய்வது அவசியம். கோயிலுக்குள் உள்ள வெள்ளி வாசலுக்கும், தங்க வாசலுக்கும் இடையேதான் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை ஆகம வல்லுநர்கள், வாஸ்து நிபுணர்கள் கலந்தாலோசித்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கோடையில் சாமானிய பக்தர்கள் அவதிப்படக் கூடாது. சுவாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். போலீஸார் போக்குவரத்து கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். இவ்வாறு நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி பேசினார். இக்கூட்டத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், தலைமை பொறியாளர் நாகேஸ்வர ராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.