

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் நேற்று பேசும்போது தனது அரசியல் வழிகாட்டி லஷ்மண் ராவ் இனாம்தார் என்று கூறினார். இதைத் தொடர்ந்து பிரதமர் குறிப்பிட்ட லஷ்மண் ராவ் இனாம்தார் யார் என்பது குறித்து இணையதளத்தில் பலரும் தேட தொடங்கி உள்ளனர்.
கடந்த 1917-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் புணே அருகேயுள்ள காவ்தவ் கிராமத்தில் லஷ்மண் ராவ் இனாம்தார் பிறந்தார். பூர்ணா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர் கடந்த 1943-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். ஹைதராபாத் நிஜாம் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.
இதன்பிறகு குஜராத் மாநிலத்தின் ஆர்எஸ்எஸ் வளர்ச்சிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். அவர் குஜராத் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவராக இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி சாதாரண தொண்டராக அந்த அமைப்பில் இணைந்தார்.
இளம் வயதில் மோடியின் திறமைகளை கண்டறிந்த லஷ்மண் ராவ் இனாம்தார், ஆன்மிக, அரசியல் ரீதியாக அவருக்கு தலைமைப் பண்புகளை கற்றுக் கொடுத்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் கடந்த 1975-ம் ஆண்டில் நாடு முழுவதும் அவசர நிலை அமல் செய்யப்பட்டது. 21 மாதங்கள் நீடித்த அவசர நிலையின்போது எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தலைமறைவாக வாழ்ந்தனர்.
அப்போது எதிர்க்கட்சி மூத்த தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸை பாதுகாக்கும் பொறுப்பை நரேந்திர மோடியிடம், லஷ்மண் ராவ் இனாம்தார் வழங்கினார். சீக்கியர் போன்றும் சாது போன்றும் மாறுவேடத்தில் மோடி சுற்றித் திரிந்தார். ஜார்ஜ் பெர்னாண்டஸும் போலீஸில் சிக்காமல் இருக்க அவர் உதவி செய்தார். அப்போதே அரசியல் களத்தில் மோடி கால் பதித்தார். அவரது வளர்ச்சியில் லஷ்மண் ராவ் இனாம்தார் முக்கிய பங்கு வகித்தார். மோடியின் ஆன்மிக, அரசியல் குருவாக அவர் செயல்பட்டார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சேஷாத்திரி சாரி கூறும்போது, “நரேந்திர மோடி இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். குஜராத் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவராக இருந்த லஷ்மண்ராவ் இனாம்தாரின் ஆதரவால் ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடி படிப்படியாக உயர்ந்தார். இப்போதுவரை லஷ்மண் ராவின் குணநலன்களையே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார்" என்று தெரிவித்தார்.
குஜராத் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் பிரதீப் ஜெயின் கூறும்போது, “அகமதாபாத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் அறை எண் 3-ல் நரேந்திர மோடி தங்கியிருந்தார். அப்போது லஷ்மண் ராவுடன் எப்போதும் இருப்பார். அவரது பேச்சு, செயல்பாடுகளை மோடி உன்னிப்பாகக் கவனிப்பார்.லஷ்மண் ராவின் பேச்சை, வேதவாக்காக கொண்டு செயல்படுவார்’’ என்று தெரிவித்தார்.
கடந்த 1985-ம் ஆண்டில் லஷ்மண் ராவ் இனாம்தார் உயிரிழந்தார். இதன்பிறகு மோடியின் வாழ்வில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. எனினும் தனது வழிகாட்டியின் நிர்வாகத் திறன், போராட்ட குணம், கடின உழைப்பை மோடி மிகவும் கண்டிப்புடன் பின்பற்றினார். கடந்த1987-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் சார்பில் பாஜக கட்சிப் பணிக்கு நரேந்திர மோடி அனுப்பப்பட்டார். அதன்பிறகு பாஜகவில் படிப்படியாக வளர்ந்து இப்போது நாட்டின் பிரதமராக அவர் உயர்ந்துள்ளார். பல்வேறு தருணங்களில் தனது ஆன்மிக, அரசியல் குரு லஷ்மண்ராவ் இனாம்தார் குறித்து பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த வரிசையில் 100-வது நாள்மனதின் குரல் நிகழ்ச்சியிலும் அவரை, பிரதமர் நினைவுகூர்ந் துள்ளார்.