ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது.

இந்தியாவின் மிகப் பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐ (ANI)-ன் ட்விட்டர் பக்கத்தை, ட்விட்டர் நிர்வாகம் சனிக்கிழமை பிற்பகல் முடக்கியது. இது தொடர்பாக ஏஎன்ஐ-க்கு, தெரிவிக்கப்பட்ட தகவலில், "ட்விட்டர் கணக்கை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 13 வயதாகி இருக்க வேண்டும். இதில் ட்விட்டர் நிறுவனம் உறுதியாக உள்ளது. இந்த விதியை மீறும் வகையில் உங்கள் கணக்கு இருப்பதால், அது முடக்கப்படுகிறது. பின்னர் உங்கள் கணக்கு டெலிட் செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ், ட்விட்டர் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "76 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட ஏஎன்ஐ ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் முடக்கி இருக்கிறது. முதலில் எங்கள் கணக்குக்கு இருந்த கோல்டன் டிக் எடுக்கப்பட்டது. பிறகு நீலநிற டிக் கொடுக்கப்பட்டது. தற்போது அதுவும் முடக்கப்பட்டுவிட்டது. நாங்கள் 13 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அல்ல. எங்கள் கணக்கை மீண்டும் எங்களுக்கு தயவு செய்து அளியுங்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும், "ஏஎன்ஐ ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், ஏஎன்ஐ ட்விட்டர் பக்கம் மீண்டும் எப்போது கிடைக்கும் என தெரியவில்லை. நாங்கள் எங்கள் செய்திகளை @ani_digital மற்றும் @AHindinews ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறோம்" என ஸ்மிதா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதனிடையே, என்டிடிவி செய்தி சேனலின் ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி நிறுவனங்களின் பக்கங்களை, அவை கிரியேட் செய்யப்பட்ட காலத்தின் அடிப்படையில், அவற்றை சிறுவர்களாகக் கருதப்பட்டு இந்த முடக்கம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in