சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச மக்கள் மீது நடவடிக்கை: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச மக்கள் மீது நடவடிக்கை: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
Updated on
1 min read

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

அசாம் மாநிலம் திப்பு நகரில் நேற்று (திங்கள் கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 40 ஆண்டுகளில் வங்கதேசத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக அதை கண்டும் காணாமல் உள்ளன.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வங்கதேசத்தில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டால் அவர்கள் அகதிகளாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் விவகாரத்தில் பாஜக கருணையுடன் அணுகும்.

இந்தியா பலவீனமான நாடு என்று கருதப்பட்டது. அதை மாற்றும் வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் இப்போது எந்த நாடும் இந்தியாவை பலவீனமான நாடு என்று கூறமுடியாது என்றார். அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ராஜ்நாத் சிங் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in