Published : 07 Sep 2017 10:18 AM
Last Updated : 07 Sep 2017 10:18 AM

பத்திரிகையாளர் கவுரி கொலை சோனியா, ராகுல் கடும் கண்டனம்

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை (55), கடந்த செவ்வாய்க்கிழமை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதற்கு சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

நமது சமுதாயத்தில் சகிப்பின்மையும் மதவெறியும் தலைதூக்கி உள்ளதையே பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை எடுத்துக் காட்டுகிறது. கவுரி லங்கேஷ் துணிச்சலாக தனது தனிப்பட்ட கருத்துகளை பத்திரிகைகளில் எழுதி வந்தவர். நமது சமுதாய நிலையை அப்படியே தனது எழுத்து மூலம் வெளிப்படுத்தியவர். மதவாதிகளால் இதுபோல் தொடர்ந்து நடக்கும் படுகொலைகளை இனிமேல் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்திய ஜனநாயகத்தில் இது மிக சோகமான நிகழ்வு.

இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.

மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சோனியா, கவுரி லங்கேஷ் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘பிரதமர் மோடி திறமையுள்ள இந்துத்துவா அரசியல்வாதி. அவர் பேசும் பேச்சுகளுக்கு 2 அர்த்தங்கள் இருக்கும். ஒன்று அவர் சார்ந்திருக்கும் அமைப்பினருக்கு ஒருவிதமாகவும், உலகத்தினருக்கு வேறு விதமாகவும் இருக்கும். எனினும் உண்மையை யாராலும் மறைத்துவிட முடியாது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இரண்டும் உண்மையை மறைத்துவிடலாம் நசுக்கிவிடலாம் என்று முயற்சிக்கின்றன. ஆனால், இந்தியாவில் அது முடியாது’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து அவர் உத்தரவிட்டார். அதன்படி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கவுரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x