

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கல்புர்கியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், ''பாஜகவின் கருத்தியல் இந்த நாட்டின் அமைதியை சீரழித்துவிட்டது. அவர்களின் கொள்கைகள் பொருளாதாரத்தை அழித்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி விஷப் பாம்பை போன்றவர்" என கடுமையாக விமர்சித்தார்.
கார்கேவின் இந்த பேச்சுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினர் கடுமையாக கண்டித்துள்ளனர். காங்கிரஸாரின் தரம் தாழ்ந்த விமர்சனத்துக்கு மக்கள் தேர்தலில் தக்கப்பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கார்கே கூறும்போது, “நான் பிரதமர் மோடியை அவ்வாறு குறிப்பிடவில்லை. பாஜகவின் கருத்துக்கள் விஷப் பாம்பை போன்றது என்று சொல்ல வந்தேன். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை’’ என்று மறுப்பு தெரிவித்தார்.