Published : 28 Apr 2023 05:33 AM
Last Updated : 28 Apr 2023 05:33 AM
பெங்களூரு: கர்நாடக தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் இலவச திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ''மக்களுக்கு இலவசப் பொருட்கள் வழங்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்'' என பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.
கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களுடன் நேற்றுகாணொலி வாயிலாக உரையாடினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கர்நாடக மக்கள் பாஜக மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர்களிடம் மக்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். நான் ஒரு தொண்டனாக கர்நாடகாவுக்கு வந்த போது மக்கள்என் மீது அன்பை பொழிந்தார்கள். கர்நாடகாவில் பாஜக அமோக வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன்.
நமது நாட்டில் சில அரசியல் கட்சிகள் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காகவே அதிகாரத்துக்கு வர துடிக்கின்றன. அதற்காக எல்லா வகையான குறுக்கு வழிகளையும் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நாட்டின் எதிர்காலம் குறித்து கவலை இல்லை. இலவச திட்டங்களையும், இலவசப் பொருட்களையும் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் தேர்தலுக்கு முன்பாகவே காலாவதி ஆகிவிடுகின்றன. இலவசமாக பொருட்கள் வழங்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். நாட்டு மக்கள் இதற்கு ஒரு முடிவை கட்ட வேண்டும்.
ஒவ்வொரு பூத்திலும் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதையே அனைவரும் இலக்காக கொள்ள வேண்டும். உங்களது வாக்குச் சாவடியில் பாஜக வென்றால், அந்த தொகுதியிலும் நிச்சயம் வெற்றி பெறும். பூத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒருங்கிணைந்த மனப்பான்மையே தேர்தலில் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தரும்.
பாஜக தொண்டர்கள் மத்திய, மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக இரட்டை இன்ஜின் அரசு மேற்கொண்ட விரைவான செயல்பாடுகளை எடுத்துரைக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி அமைந்தால் நாடும் மாநிலமும் சேர்ந்து வளரும். மத்திய அரசிடம் சண்டையிட்டு திட்டங்களை செயல்படுத்தாத அரசு, கர்நாடகாவில் அமைந்தால் அந்த மாநிலம் எப்படி வளர்ச்சி அடையும்? இரட்டை இன்ஜின் அரசு அமைந்தாலே மக்களுக்கான எல்லா நலத் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT