Published : 26 Apr 2023 06:22 PM
Last Updated : 26 Apr 2023 06:22 PM
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பஞ்சாபின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவரான சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கடந்த சில நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக, கடந்த 16ம் தேதி மொகாலி நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவர் கடந்த 18-ம் தேதி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 25) அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 95.
மறைந்த தலைவரின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக சண்டிகரில் உள்ள சிரோமணி அகாலி தளம் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான கட்சிப் பிரமுகர்களும், பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த முதுபெரும் தலைவர் பிரகாஷ் சிங் பாதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது மகனும் சிரோமணி அகாலி தளத்தின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பிரகாஷ் சிங் பாதலின் உடல் நாளை மதியம் 1 மணி வரை சண்டிகரில் வைக்கப்பட்டிருக்கும் என்றும், அதன் பிறகு அவரது சொந்த ஊரான முக்த்சார் மாவட்டத்தில் உள்ள பாதல் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT