Last Updated : 28 Sep, 2017 07:49 AM

 

Published : 28 Sep 2017 07:49 AM
Last Updated : 28 Sep 2017 07:49 AM

4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக, இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கர்நாடகாவில் கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மூடம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவர அம்மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வரவேற்பும் இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற சித்தராமையா, “மகராஷ்டிராவைப் போல கர்நாடகாவிலும் விரைவில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்படும். இதன் மூலம் காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மத வழிபாட்டு தலங்களில் செய்யப்படும் மனிதத் தன்மையற்ற சடங்குகள், ஜோதிடம், மாந்தீரிகம், நரபலி உள்ளிட்டவை ஒழிக்கப்படும். குறிப்பாக மங்களூரு குக்கே சுப்ரமணிய கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது தலித்துகள் உருளும் சடங்கு (மடே ஸ்நானா), நிர்வாண பூஜை உள்ளிட்ட சடங்குகளுக்கு தடை விதிக்கப்படும்” என்றார்.

இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, “மத நம்பிக்கையில் எக்காரணம் கொண்டும் தலையிட கூடாது. மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. இந்த சட்டத்தை கொண்டுவந்தால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

இதேபோல முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், மடாதிபதிகளின் கூட்டமைப்பும் மறைமுகமாக இந்த சட்டத்தை எதிர்த்தன. காங்கிரஸில் உள்ள சில எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் எதிர்த்ததால் சித்தராமையா அதிர்ச்சி அடைந்தார். எனவே மூடநம்பிக்கை ஒழிப்பு சட்ட மசோதா கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என முற்போக்குவாதியான சித்தராமையாவுக்கு கன்னட எழுத்தாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்தனர். இந்த சட்டத்தின் மூலம் தொலைக்காட்சியில் ஜோதிடம், வாஸ்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

விரைவில் மசோதா தாக்கல்

இந்நிலையில் நேற்று சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் கர்நாடகாவில் நிலவும் அனைத்துவிதமான மூட நம்பிக்கைகளையும், கோயில்களில் மேற்கொள்ளப்படும் உருளு சேவை, நிர்வாண பூஜை, அகோரி வழிபாடு, நரபலி, மாந்தீரிகம், செய்வினை, பேய் ஓட்டுவது போன்ற அனைத்து மூடநம்பிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து சித்தராமையா கூறும்போது, “சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தலைமையில் சட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு இந்த சட்டத்துக்கு முழு வடிவம் அளிக்கப்படும். இந்தக் குழு அனைத்து மத பெரியோர்களிடமும் ஆலோசனை நடத்தி, உரிய முடிவை மேற்கொள்ளும். இந்த சட்டம் தொடர்பாக அரசியல் கட்சியினர், முற்போக்கு அமைப்பினர், மடாதிபதிகளிடமும் ஆலோசனை நடத்தும். அதன்பிறகு, வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்” என்றார்.

இது தொடர்பாக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா கூறும்போது, “நீண்ட காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கர்நாடகாவில் விரைவில் அமலாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் இந்த மசோதா முழு வடிவம் பெறாததால், அதில் உள்ள அம்சங்கள் தொடர்பாக இப் போது பேச முடியாது. ஜோதிடம், வாஸ்துவுக்கு தடை விதிப்பது தொடர்பாக முடிவெடுக்கவில்லை” என்றார்.

கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு முற்போக்கு அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும், முற்போக்கு மடாதிபதிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x