

புதுடெல்லி: தன்பாலின திருமணத்துக்கு அனுமதி தர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தன்பாலின உறவாளர்களின் பெற்றோர்கள் கூட்டமைப்பான ஸ்வீகார் (Sweekar) கடிதம் எழுதியுள்ளது.
தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு தன்பாலின உறவாளர்களின் பெற்றோர்கள் கூட்டமைப்பான ஸ்வீகார் கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
எங்கள் குழந்தைகளின் உறவுக்கு சிறப்பு திருமண சட்டங்களின் கீழ் சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இந்தியா மிகப்பெரிய தேசமாக உள்ளது. பன் முகத்தன்மையை மதிக்கக்கூடிய தேசம். ஆகவே, எங்கள் குழந்தைகளின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டு அவர்களின் பாலின சார்பை உச்சநீதிமன்றம் மதித்து ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம்.
எங்களைப் போலவே எல்லோரும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம். தன்பாலின உறவாளர்களின் திருமணத்தை எதிர்ப்பவர்கள் மாறுவார்கள். இந்திய மக்களின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் மீதும் இந்திய ஜனநாயகத்தின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாகாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், எங்கள் குழந்தைகள் சமூகத்தில் மாண்புடன் ஏற்றுக்கொள்ளத்தகவர்களாக நடமாட வழி செய்தது.
அந்தத் தீர்ப்பால் தன்பாலின உறவாளர்கள் மீதான வெறுப்புப் பார்வையும் மாறியது. சமூகம் அவர்களை இப்போது ஏற்றுக்கொள்கிறது. அதனால் தன்பாலின உறவாளர்களான எங்கள் குழந்தைகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பார் கவுன்சில் எதிர்ப்பு
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுப்பதுதான் நல்லது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முடிவு எடுப்பது எதிர்மறையாக அமையக்கூடும் என்று இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.