ஜெர்மனி பத்திரிகைக்கு இந்தியர்கள் எதிர்ப்பு முதல் ‘கம்பேக்’ நாயகன் ரஹானே வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.25, 2023

ஜெர்மனி பத்திரிகைக்கு இந்தியர்கள் எதிர்ப்பு முதல் ‘கம்பேக்’ நாயகன் ரஹானே வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.25, 2023
Updated on
4 min read

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு தேதி மாற்றம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில், "12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்கு பின்பாக வெளியிடுவது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். மாணவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என்றார்.

“மக்கள் நலனிற்காக முடிவுகளை எடுக்க வேண்டும்”: தமிழக அரசு மக்கள் நலனை மனதில் வைத்து கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,"தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைத்தது, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்துசெய்தது, பள்ளிக் கல்வி துறையில் LKG வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.

மணல் கடத்தலைத் தடுத்த விஏஓ வெட்டிக் கொலை: தூத்துக்குடி அருகே மணல் கடத்தலுக்கு இடையூறாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி நேரில் விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் இன்று மதியம் 12.30 மணியளவில் தனது அலுவலகத்தில் இருந்தபோது, அலுவலகத்துக்குள் வந்த 2 நபர்கள், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்த நிலையில் 2 நபர்களும் அங்கிருந்து தப்பியோடினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லூர்து பிரான்சிஸை அக்கம் பக்கத்தினர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் பிற்பகல் 2.40 மணியளவில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு என்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். மாரிமுத்துவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

‘ரெயின்போ திருமணங்கள் கைகூடும்...’: ரெயின்போ திருமணங்கள் கைகூடும் என நம்பிக்கை தெரிவித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு தன்பாலின உறவாளர்களின் பெற்றோர்கள் கூட்டமைப்பு ஸ்வீகார் (Sweekar) கடிதம் எழுதியுள்ளது.

நாடு முழுவதும் 400 பெற்றோர் இணைந்து எழுதியுள்ள இந்தக் கடிதத்தில், “தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாகாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், எங்கள் குழந்தைகள் சமூகத்தில் மாண்புடன் ஏற்றுக்கொள்ளத்தகவர்களாக நடமாட வழி செய்தது. சமூகம் என்பது மாறிக் கொண்டே, பரிமாணித்துக் கொண்டே இருக்கும். கடல் அலைகள் மேலெழும்போது அது எல்லாப் படகுகளையும் தூக்கிவிடுவது போல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகத்தில் ஒரு விளைவை ஏற்படுத்தியது. அந்தத் தீர்ப்பால் தன்பாலின உறவாளர்கள் மீதான வெறுப்புப் பார்வை மாறியது. சமூகம் அவர்களை பொறுத்துக் கொண்டது. இப்போது ஏற்றுக்கொள்கிறது. அதனால் எதிர்காலத்தில் தன்பாலின உறவாளர்களான எங்கள் குழந்தைகளின் ரெயின்போ திருமணம் சட்ட அங்கீகாரம் பெறும் என நம்புகிறோம்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நீர்வழி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர்: கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அதேபோல், கொச்சி வாட்டர் மெட்ரோ சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். கொச்சி 'வாட்டர் மெட்ரோ' அத்துறைமுக நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும். உயர் நீதிமன்றம் - விபின் மற்றும் விட்டிலா - கக்கநாட் இடையே என இரண்டு முனையங்கள் இயங்கும். முதற்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைப்ரிட் படகுகள் கொச்சி 'வாட்டர் மெட்ரோ' சேவையில் இணைக்கப்படுள்ளன.

மீண்டும் அணியில் ‘கம்பேக்’ நாயகன் ரஹானே!: எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக வரும் ஜூன் 7-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

ரோஹித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ள இந்த அணியில் ரஹானே சுமார் ஓராண்டுக்கு பிறகு அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ரஹானே, டாப் ஆர்டரில் அதிரடி ஆட்டத்தின் மூலம் மிரட்டி வருகிறார். அவரது அணுகுமுறை வழக்கத்திற்கும் மாறான முறையில் அதிரடி ஷாட்கள் ஆடி ரன் குவித்து வருகிறார். இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

கிட்டத்தட்ட ரஹானேவின் சர்வதேச கிரிக்கெட் கரியருக்கு முடிவுரை எழுதப்பட்ட நிலையில், எதிர்வரும் அணியில் கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளார். பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்தத்தில் ரஹானேவின் பெயர் இல்லை என்ற நிலையிலும் இவர் கம்பேக் கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

டெல்லி காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக காவல் துறை எஃப்ஐஆர் பதிவு செய்ய இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏழு வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவினை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வீராங்கனைகளின் குற்றச்சாட்டு தீவிரமானது என்று தெரிவித்துள்ளது.

“பிரதமர் பதவி காலியாக இல்லை நிதிஷ்..”: "நாட்டில் பிரதமர் பதவி காலியாக இல்லை. அது தெரிந்துதான் நிதிஷ்குமார் நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவே விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்" என்று பாஜக மூத்த தலைவர் ஷானவாஸ் ஹுசைன் விமர்சித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிதிஷ் குமார், அதற்காக திங்கள்கிழமை மம்தா பானர்ஜி மற்றும் அகிலேஷ் யாதவைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ் , தனக்கு பிரதமர் பதவி மற்றும் அதிகாரத்துக்கான ஆசை இல்லை என்று தெரிவித்திருந்தார்.

சூடானில் இருந்து 278 இந்தியர்களுடன் புறப்பட்ட ஐஎன்எஸ் சுமேதா: உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட 278 இந்தியர்களுடன் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் புறப்பட்டது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆபரேஷன் காவிரி மூலம் மீட்கப்பட்ட இந்தியர்கள் அடங்கிய முதல் குழு சூடான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இந்தக் குழுவானது ஐஎன்எஸ் சுமேதா கப்பலின் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திற்கு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

ஜெர்மனி பத்திரிகை கார்ட்டூனுக்கு இந்தியர்கள் எதிர்ப்பு: மக்கள் தொகையில் சீனாவை, இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தெரிவித்தது. இதைக் கருப்பொருளாக வைத்து ஜெர்மன் நாட்டின் ‘டெர் ஸ்பீகல்’என்ற வார இதழ் வெளியிடிருந்த கார்ட்டூன் ஒன்றை இந்தியர்களை கொதிப்படைய செய்யதுள்ளது. கார்ட்டூனில் சீனா மற்றும் இந்திய தேச கொடிகளை பிரதிபலிக்கும் ரயில்கள் இடம்பெற்றிருக்கின்றன. சீன ரயிலை முந்தும் இந்திய ரயிலில் பயணிகள் ரயிலின் மேற்கூரை உட்பட பெரும்பாலான இடங்களில் இருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதோடு சீனாவின் தொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சியை சுட்டிக்காட்டும் வகையில் அவர்கள் புல்லட் ரயிலில் பயணிப்பது போல சித்திரம் தீட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து “இது ஜெர்மனி இனவெறியை பரப்பும் வகையில் உள்ளது. இந்தக் கார்ட்டூன் இந்தியாவின் யதார்த்தத்துடன் எந்த வகையிலும் பொருந்தவில்லை. இதன் நோக்கம் இந்தியாவைத் தாழ்த்துவதே”என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in