

ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா எனும் புதிய கட்சியை தெலங்கானா மாநிலத்தில் ஷர்மிளா தொடங்கி உள்ளார். சமீபத்தில் தெலங்கானா பொதுத் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாள்கள் கசிந்ததை எதிர்த்து இவரும் பல போராட்டங்களை நடத்தினார்.
இவ்வழக்கை விசாரிக்க சிறப்புக் குழுவை தெலங்கானா அரசு நியமனம் செய்துள்ளது. இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து ஒய்.எஸ்.ஷர்மிளா, விசாரணை நடத்தும் சிறப்பு குழுவின் அலுவலகத்துக்கு செல்ல தனது வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அப்போது வீட்டின் வெளியே இருந்த போலீஸார் இவரை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், போலீஸாருக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஷர்மிளா, மகளிர் போலீஸ் ஒருவரையும், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரையும் அடித்தார். இதையடுத்து இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் நாம் பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஷர்மிளாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.