

பாட்னா: கர்நாடக மாநிலம் கோலாரில் ‘மோடி’ என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் குஜராத் மாநில சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ராகுலின் மேல்முறையீட்டு மனுவை சூரத் செஷன்ஸ் நீதி மன்றம் கடந்த 20-ம் தேதி தள்ளு படி செய்தது.
இதனிடையே ராகுல் காந்தி பேசியது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, பாட்னாவில் மற்றொரு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜராகி, வாக்கு மூலத்தை பதிவு செய்ய வேண்டும் என பாட்னா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக பாட்னா உயர் நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு நீதிபதி சந்தீப் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி வரும் மே 16-ம் தேதிக்குள் மனு தாரர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார்.