

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அத்தீக் அகமது (60) மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் 28-ம் தேதி விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடியாக இருந்து அரசியல் கட்சியில் தஞ்சம் புகுந்து எம்.பி.யாக வலம் வந்தவர் அத்தீக் அகமது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த 15-ம் தேதி அழைத்துச் செல்லப்பட்டபோது, 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து உச்ச நீீதிமன்ற நீதிபதி தலைமையில் சுந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது விசாரணைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக ‘‘இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று திவாரி வலியுறுத்தினார்.
அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஓய்வில் உள்ளனர். மேலும் சிலரும் வேறு சில காரணங்களால் உடல் நிலை சரியில்லாமல் உள்ளனர். இதனால், முக்கிய சில வழக்குகள் விசாரணை குறித்த தேதிகள் இன்னும் பட்டியலிடப்படாமல் உள்ளன. அத்தீக் தொடர்பான மனு 28-ம்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற கடந்த 6 ஆண்டுகளில் 183 குற்றவாளிகள் என்கவுன்ட்டர் என்றபெயரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில், அத்தீக் அகமது மகன் ஆசாத்தும் அடங்குவார்.
இந்த சூழலில் அத்தீக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரப்பும் சுட்டுக்கொல்லப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும், இது போன்ற நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாகவும், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறைக்கு சவால்விடுக்கும் வகையிலும் அமைந்துள்ளன.
எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான ஒரு நிபுணர் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திவாரி அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.