Published : 24 Apr 2023 06:54 AM
Last Updated : 24 Apr 2023 06:54 AM

காஷ்மீர், வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளின் போர் முனைகளில் பெண் அதிகாரிகள் நியமனம்

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் 108 பெண்களுக்கு கர்னல் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் 55 சதவீதம் பேர், காஷ்மீர், வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளின் போர் முனைகளில் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1992-ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் முதல்முதலாக பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் குறுகிய கால பணி (எஸ்எஸ்சி) என்ற அடிப்படையில் 14 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், "ராணுவத்தில் பெண்களை நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும். ஆண், பெண் பாகுபாடு காட்டக்கூடாது" என்று தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி ராணுவத்தின் உயரதிகாரிகள் நியமனத்தில் பெண்களுக்கு சமபங்கு அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரியில் ராணுவத்தில் 244 பேருக்கு கர்னல் பதவி வழங்கப்பட்டது. இதில் 108 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் 55 சதவீதம் பேர், காஷ்மீர், வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளின் போர் முனைகளில் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ராணுவ உயரதிகாரிகள் கூறியதாவது: ஆண், பெண் பாகுபாடு இன்றி தகுதியின் அடிப்படையில் கர்னல் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பிரிகேடியர் உள்ளிட்ட பதவிகளிலும் இதே அணுகுமுறை பின்பற்றப்படும். ராணுவத்தில் வரும் 2024-25-ம் ஆண்டில் ஆண்கள், பெண்களுக்கான பொதுவான தேர்வு ஆணையம் உருவாக்கப்படும். இதன்பிறகு பாலின பாகுபாடு இல்லாமல் தகுதியின் அடிப்படையில் உயரதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

ராணுவ பணி, உளவு, தளவாடங்கள், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சமபங்கு விகிதத்தில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். எம்.டெக். உள்ளிட்ட உயர் கல்வி படித்த பெண்களும் தற்போது ராணுவத்தில் இணைந்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது.

இந்த ஆண்டு டிஎஸ்எஸ்சி தேர்வில் 4 பெண்கள் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர். அவர்கள் கமாண்டர் பதவியைப் பெறும் வாய்ப்பு இருக்கிறது. சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் 200 அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேர் பெண்கள். வரும் 29-ம் தேதி அவர்கள் பயிற்சியை நிறைவு செய்ய உள்ளனர். இவ்வாறு ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x