

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த 17 ரோஹிங்கியா முஸ்லிம்கள் தடுத்து நிறுத்தப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் திரிபுராவில் எல்லைப்பகுதியில் மொத்தமுள்ள 21 கிலோமீட்டரில் 75 இடங்கள் ரோஹிங்கியாக்கள் ஊடுருவ வாய்ப்புள்ள இடங்களாக மத்திய பாதுகாப்புப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வங்கதேச எல்லையிலிருந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நுழையும் ரோஹிங்கியா முஸ்லிம்களை திருப்பி அனுப்புமாறு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அம்மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ரோஹிங்கியா முஸ்லிம்களுடன் தீவிரவாதிகளும் ஊடுருவ நிறைய வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்ப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் அசாம் - திரிபுரா எல்லையில் நுழைந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் மத்திய பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறு ரோஹிங்கிய முஸ்லிம்களை அடையாளம் காண்கிறீர்கள் என்பது குறித்த கேள்விக்கு மத்திய பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, "ரோஹிங்கியா முஸ்லிம்களை அடையாளம் காண்பது கடினமானது ஒன்றும் இல்லை. அவர்கள் பேசும் வங்க மொழி இந்தியாவில் பேசும் வங்க மொழியிலிருந்து வித்தியாசப்படுகிறது. அவர்கள் வங்கதேசத்திலுள்ள பசார் பகுதியிலிருந்து பயணித்து இந்திய எல்லைக்குள் வருகின்றனர்" என்றார்.
முன்னதாக ரோஹிங்கிய முஸ்லிம்கள் சட்டவிரோதக் குடியேறிகள், இவர்கள் தொடர்ந்து நாட்டில் இருந்தால் ‘தேசப்பாதுகாப்பு விவகாரத்தில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.