உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கு கரோனா பாதிப்பு: வழக்கு தேங்குவதை தடுக்க அமர்வுகள் மாற்றம்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வழக்குகள் தேக்கமடைவதை தவிர்க்க, அமர்வுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பாதிப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில் குணமடைந்தார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ்,எஸ்.ரவீந்திர பட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பல நீதிபதிகளின் குடும்பத்தினருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தன்பாலின திருமண வழக்கை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வில் கடந்த வியாழக்கிழமை வரை விசாரணை நடத்தி வந்த நீதிபதி ரவீந்திர பட்டுக்கு தற்போது கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மற்ற 4 நீதிபதிகளும், தங்களுக்கு கரோனா அறிகுறி உள்ளதா என்று கண்காணித்து வருகின்றனர்.

தன்பாலின திருமண வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தொடர்ந்து விசாரிக்க இருந்தது. இந்நிலையில், இந்த அமர்வில் ஒரு நீதிபதிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இந்த அமர்வின் விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அவசர நிலை காரணமாக நீதிபதி கவுல் நாளை நீதிமன்றத்துக்கு வரமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தேக்கமடைவதை தடுக்க, புதிய 2 அமர்வுகளுக்கு வழக்குகளை தலைமை நீதிபதி மாற்றியுள்ளார்.

12,193 பேருக்கு தொற்று

இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,193 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,48,81,877 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 42 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,300 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் 67,556 பேர் உள்ளனர். இதுவரை கரோனா தடுப்பூசிகள் 220.66 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in