Published : 23 Apr 2023 07:41 AM
Last Updated : 23 Apr 2023 07:41 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளையும், நாளை மறுநாளும் 36 மணி நேரத்தில் 5,300 கி.மீ. தொலைவு பயணம் செய்கிறார். கொச்சி உட்பட 7 நகரங்களின் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
டெல்லியில் இருந்து நாளை காலை மத்திய பிரதேசத்தின் கஜூராஹோவுக்கு பிரதமர் மோடி விமானத்தில் செல்கிறார். அங்கிருந்து மத்திய பிரதேசத்தின் ரேவா நகருக்கு செல்கிறார். அங்கு காலை 11.30 மணிக்கு நடைபெறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் அவர் பங்கேற்று ரூ.17,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார், அடிக்கல் நாட்டுகிறார். ரேவா நிகழ்ச்சியை நிறைவு செய்த பிறகு கஜுராஹோவுக்கு திரும்பும் பிரதமர் மோடி அங்கிருந்து கேரளாவின் கொச்சி நகருக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் இளைஞர் திருவிழாவில் பேசுகிறார்.
நாளை மறுநாள் கொச்சியில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். அங்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை 10. 30 மணிக்கு நடைபெறும் விழாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர் காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் ரூ.3,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். பின்னர் குஜராத்தின் சூரத் வழியாக தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் உள்ள சில்வாசாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். அங்கு மாலை 4:30 மணிக்கு நடைபெறும் விழாவில் ரூ.4,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். பின்னர் டாமனுக்கு செல்கிறார். அங்கு மாலை 6 மணிக்கு தேவ்கா கடற்பகுதியை அவர் திறந்து வைக்கிறார். பின்னர் சூரத் வழியாக டெல்லிக்கு அவர் திரும்புகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளையும், நாளை மறுநாளும் 36 மணி நேரத்தில் 5,300 கி.மீ. தொலைவு பயணம் செய்கிறார். கொச்சி உட்பட 7 நகரங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மிரட்டல் கடிதத்தால் பலத்த பாதுகாப்பு
கேரள பாஜக அலுவலகத்துக்கு கடந்த 17-ம் தேதி வந்த கடிதத்தில், “ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட நிலை பிரதமர் மோடிக்கும் ஏற்படும். கேரளாவில்
சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது தற்கொலைப் படை தாக்குதல் மூலம் அவர் படுகொலை செய்யப்படுவார்" என்று மிரட்டல்
விடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் கூறியதாவது: பிரதமர் மோடியின் கேரள பயணம் தொடர்பான
கேரள உளவுத் துறையின் ரகசிய அறிக்கை வெளியே கசிந்திருக்கிறது. மாநில போலீஸாரே இந்த ரகசிய அறிக்கையை ஊடகங்களுக்கு
அளித்திருப்பதாக சந்தேகிக்கிறோம். ஆளும் இடதுசாரி கூட்டணியோடு தொடர்புடைய 2 அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடியின்
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்புகளை கூட்டணியில் இருந்து
வெளியேற்ற முதல்வர் பினராயி விஜயன் தயாரா?
அந்த மிரட்டல் கடிதத்தை போலீஸாரிடம் அளித்துள்ளோம். இவ்வாறு சுரேந்திரன் தெரிவித்தார். கொச்சி காவல் ஆணையர்
சேது ராமன் நேற்று கூறும்போது, “தலைமைச் செயலாளரின் மேற்பார்வையில் பிரதமர் மோடியின் கொச்சி நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT