

12 மணி நேர வேலை - தொழிற்சங்கங்கள் உடன் அரசு ஆலோசனை: 12 மணி நேர வேலை சட்ட மசோதா தொடர்பாக வரும் 24-ஆம் தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழக சட்டமன்றத்தில் "தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்து வருவதால் வரும் திங்கள்கிழமை மதியம் 3-00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மணி நேர வேலை - முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் சாடல்: “எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அன்று மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தபோது எதிர்த்துப் பேசிவிட்டு, இப்போது கொத்தடிமையாக மாறி, தமிழக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக, 12 மணி நேர வேலை திருத்தச் சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் ஒருதலைபட்சமாக நிறைவேற்றியிருக்கிறார்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
‘அதிகாரிகளின் கணினிகள் மூலம் டெண்டர் சமர்ப்பித்த ஒப்பந்ததாரர்கள்’: தமிழக நெடுஞ்சாலைத் துறையின் 2016 முதல் 2021 வரையிலான செயல்பாடுகள் குறித்து சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் டெண்டரை சமர்ப்பித்து உள்ளதாகவும், அது விதிமீறல் என்றும் கூறப்பட்டுள்ளது.
“ஊழலால் கர்நாடக மாநில வளர்ச்சியில் பின்னடைவு”: ஊழல் புற்றுநோய்க்கு நிகரானது. நிர்வாகத் திறனை அரித்துவிடும் என்று லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் தெரிவித்துள்ளார். ஊழல் காரணமாக கர்நாடக மாநிலம் அது அடைந்திருக்க வேண்டிய வளர்ச்சியை அடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர், கர்நாடகாவில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே இதேநிலைதான் நீடிக்கிறது. ஊழல் மலிந்துவிட்டதால நேர்மையான அதிகாரிகள் மனம் நொந்து போயுள்ளனர். உண்மையில் ஊழல் ஒழிப்பை அமைப்பு ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அரசு அமைப்புகளில் ஊழலைக் களைவதை கையில் எடுக்க வேண்டும்" என்றார்.
சத்யபால் மாலிக் குறித்து அமித் ஷா கேள்வி: ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்தவரான சத்யபால் மாலிக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் 40 பேர் உயிரிழக்க, மத்திய அரசின் அணுகுமுறையே காரணம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சத்யபால் மாலிக் தனது குற்றச்சாட்டுகளை பதவியில் இருக்கும்போது கூறாமல் இப்போது ஏன் கூறவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். இதுவே அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதை உணர்த்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, , ரிலையன்ஸ் இன்ஷூரன்ஸ் காப்பரேஷன் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சத்தியபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு இல்லத்தை காலி செய்த ராகுல் காந்தி: எம்.பி பதவி தகுதி இழப்பின் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தை ராகுல் காந்தி காலி சனிக்கிழமை காலி செய்தார்.
மம்தா பானர்ஜியின் ரம்ஜான் உறுதிமொழி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகை கூட்டத்தில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது பேசி அவர், "வெறுப்பு அரசியலைக் கடைபிடிப்பதன் மூலமாக சிலர் நாட்டை பிளவுபடுத்த முயல்கின்றனர். நான் எனது உயிரைக் கூட விடுவேன், ஆனால் நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மட்டேன். வரும் தேர்தலில் அந்தப் பிரிவினை சக்திக்கு எதிராக வாக்களிப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்” என்று என்று தெரிவித்தார்.
ஆவணக் கொலை தடுப்புச் சட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல்: ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்றும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமைப் பகுதி என்று அறிவிக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ: வர்த்தக நோக்கில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் இந்தியாவின் நியூஸ்பேஸ் இந்தியா லிட். நிறுவனம், சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு ஏற்ப ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூரின் இரண்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
“பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக உள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டி”: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மிக அதிகமாக பேட்டர்களுக்குச் சாதகமாக இருக்கின்றது, பவுலர்கள் வெறுமனே பேட்டர்கள் அடிப்பதற்கான மெஷின் பவுலர்கள் ஆகிவிட்டனர் என்ற தொனியில் சச்சின் டெண்டுல்கர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது 50-வது பிறந்த தினத்தை ஒட்டி சச்சின், செய்தியாளர்களிடம் பேசியபோது, “மூன்று வடிவங்களும் வெவ்வேறானவை. இதில் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டை கொஞ்சம் கூர்ந்து கவனித்து சில மாற்றங்களை செய்ய வேண்டும். பந்துக்கும் பேட்டுக்கும் சமநிலை இல்லை. பேட்டர்கள் பக்கம் ஒருதலைபட்சமாக சாதகப் பலன்கள் இருக்கின்றன” என்றார்.