Published : 29 Aug 2017 10:03 AM
Last Updated : 29 Aug 2017 10:03 AM

ஆன்லைன் விளையாட்டுக்கு உத்தரபிரதேச சிறுவன் பலி: கொல்கத்தாவில் மாணவர் மீட்பு

உத்தரபிரதேசத்தில் ‘புளூவேல்’ ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டான்.

தற்கொலைக்கு தூண்டும் புளூவேல் ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு உலகம் முழுவதும் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, நீலத் திமிங்கிலம் போன்ற அபாயகரமான தற்கொலைக்குத் தூண்டும் ஆன் லைன் விளையாட்டுக்களை நீக்குமாறு சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், புளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட உத்தரபிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டம் மவுதஹா என்ற கிராமத்தைச் சேர்ந்த பார்த் சிங் என்ற 13 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

கடந்த சில நாட்களாக ஆபத்தான புளூவேல் ஆன் லைன் விளையாட்டை பார்த் சிங் விளையாடி வந்ததாக அவனது குடும்பத்தார் தெரிவித்தனர்.

கொல்கத்தாவில் மாணவர் மீட்பு

கொல்கத்தாவில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதைக் கண்ட கல்லூரி நிர்வாகம் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவுக்கு தகவல் அளித்தது.

விசாரணையில் அந்த மாணவர் சில நாட்களாக புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதும் அதனால் அவரது நடவடிக்கையில் மாற்றம் இருப்பதும் தெரிந்தது. மாணவரின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மாணவருக்கு மனநல கவுன்சலிங் வழங்கப்பட்டதால் ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டார். இப்போது அந்த மாணவர் நலமுடன் சகஜமாக இருப்பதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x