பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் கடிதம்: கேரளாவில் உஷார் நிலை

பிரதமர் மோடி | கோப்புப்படம்
பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: பிரதமர் மோடியின் கேரள வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில பாஜக தலைமை அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பட்டடுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைக்க வரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி கொச்சி செல்லவிருக்கிறார். இந்தநிலையில், பிரதமர் மோடியின் கொச்சி வருகையின்போது தற்கொலை தாக்குதல் நடத்தப்படும் என்று, அம்மாநில பாஜக அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், அனுப்பியவர் பெயர், முகவரி அனைத்து விவரங்களும் குறிக்கப்பட்டுள்ளன. கடித்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த நிலையில்அந்த நபர், தான் எந்தக் கடிதமும் அனுப்பவில்லை என்றும், தன்னுடைய எதிரிகள் தன்னை சிக்கலில் மாட்டிவிடும் நோக்கத்தில் தனது பெயரைப் பயன்படுத்திவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கூடுதல் விவரங்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் கோரியுள்ளன.

இதற்கிடையில், பாதுகாப்பு ஒத்திகைகளை குறிக்கும் ஏடிஜிபியின் கடிதம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில், தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உட்பட பல்வேறு அமைப்புகளால் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஏடிஜிபின் கடிதம் ஊடகங்களில் கசிந்தது குறித்து கவலை தெரிவித்துள்ள கேரளாவைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், இது மாநில காவல்துறையில் உள்ள குறைபாடுகளைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைக்கவும், பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் இருக்கும் பிரதமரின் கேரள வருகை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அம்மாநில பாஜக தலைவர் சுரேந்தரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்தரன், "பிரதமரின் கேரள வருகை, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உத்வேகம் அளிக்கும். மக்களிடம் பிரதமரின் வருகை குறித்த பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பிரதமர் மோடி சாலையோர நிகழ்வுகளை நடத்துவார். மக்கள் தாமாக முன்வந்து அவரை வரவேற்பர். யுவம் மாநாடு கேரளாவில் ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும். அரசியலுக்கு அப்பாற்பட்டு கேரளாவின் வளர்ச்சியை வரும் இளைஞர்கள் அனைத்து இளைஞர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in