

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள். இந்தநாளில் நல்லிணக்கமும், இரக்கமும் நம் சமூகத்தில் தழைத்தோங்கட்டும். அனைவரின் நலனுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ஜும்மா மஸ்ஜித்தில் நடந்த ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நபிகள் காட்டிய சமத்துவ சமுதாயம்அமைக்கும் பணியில் சமரசமின்றிதனது பயணத்தை திமுகவும், அரசும் தொடர்கிறது. என்றென்றும் தொடரும். நபிகள் போதித்தவழி நின்று நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரம்ஜான் கொண்டாடும் முஸ்லிம் சமூகத்தினர் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த ரம்ஜான் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாதஇதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகுக்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளை செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும். இவ்வாறாக வாழ்த்து தெரிவித்தனர்.