

பெங்களூரு: கர்நாடக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்.
கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜகவின் 30க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சுமன் சவதி உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான வியாழக்கிழமை முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கும், அவரது மகன் காந்தேஷுக்கும் சீட் கிடையாது என பாஜக மேலிடம் தெரிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஈஸ்வரப்பா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரும் பாஜகவில் இருந்து விலகி விடுவார் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஈஸ்வரப்பாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது மோடி, " கர்நாடகாவில் பாஜகவை வளர்க்க நீங்கள் செய்த தியாகத்தை பெரிதும் மதிக்கிறேன். சீட் வழங்கும் விவகாரத்தில் கட்சி எடுத்த முடிவை நீங்கள் ஏற்றுக்கொண்டதற்காக நன்றி. கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர நீங்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடகா வரும்போது உங்களை சந்திக்கிறேன்" என சமாதானமாக பேசினார்.
இதற்கு ஈஸ்வரப்பா, " என்னை போன்ற சாதாரண தொண்டனை தொடர்பு கொண்டு பேசியதற்கு மிக்க நன்றி. இதன் மூலம் நீங்கள் எவ்வளவு பெரிய தலைவர் என்பதை தொண்டர்களுக்கு உணர்த்தி விட்டீர்கள். நிச்சயமாக பாஜகவின் வெற்றிக்காக ஷிமோகாவில் மட்டுமல்லாமல் கர்நாடகா முழுவதும் உழைப்பேன்" என பதிலளித்தார். மேலும் இந்த உரையாடல் தொடர்பான வீடியோவையும் ஈஸ்வரப்பா வெளியிட்டுள்ளார்.
இதனை பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மோடியை பாராட்டி வருகின்றனர். அதேவேளையில் காங்கிரஸார், ஈஸ்வரப்பா பாஜகவை விட்டு போய் விடுவார் என்ற பயத்தில்தான் மோடி அவரிடம் தொலைபேசியில் பேசியதாக விமர்சித்துள்ளனர்.
அமித் ஷா ஆலோசனை: பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்று பெங்களூரு வந்தார். ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் பிரச்சாரம் மற்றும் பேரணியை அவர் ரத்து செய்தார்.
இதையடுத்து மாலையில் பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் அமித் ஷா கர்நாடக தேர்தல் குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மூத்த தலைவர்கள் பி.எல்.சந்தோஷ், சி.டி.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.