Published : 21 Apr 2023 02:00 PM
Last Updated : 21 Apr 2023 02:00 PM
புதுடெல்லி: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிவில் சர்வீஸ் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அவரது உரை விவரம் வருமாறு: ''இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வரும் முதல் சிவில் சர்வீஸ் தினம். அடுத்த 25 ஆண்டுகளில் மிகப் பெரிய இலக்குகளை அடைவதற்கான படியை நாடு எடுத்து வைத்திருக்கிறது.
இந்தக் காலத்தில் மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளதன் மூலம் நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். நமக்கு குறைந்த காலமே உள்ளது. அதேநேரத்தில் நம்மிடம் அதிக வளங்கள் உள்ளன. நமது இலக்குகள் கடினமானதாக இருக்கலாம். ஆனால், நமது உறுதி குறைவானது அல்ல. நமது நோக்கம் வானத்தைவிட உயர்வானது.
அரசு எவ்வளவு பெரிய திட்டங்களை அறிவிக்கிறது என்பதோ, ஆவணங்களில் அது எவ்வாறு சிறப்பானதாக இருக்கிறது என்பதோ முக்கியமல்ல. கடைசி மனிதனை சென்றடைவதில்தான் அந்த திட்டத்தின் வெற்றி உள்ளது. நாட்டை பாய்ச்சல் வேகத்தில் முன்னேற்ற சிவில் பணியாளர்கள் தங்களை தயார் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நாட்டின் ஏழைகளுக்கு நல்ல அரசை கொடுப்பதற்கும், நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் அவர்கள் மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த 9 ஆண்டுகளில் நல்ல அரசு என்பதன் மீது நாட்டின் ஏழைகளுக்கு மிகப் பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. உங்களின் கடின உழைப்புதான் இதற்கு முக்கிய காரணம். கடந்த 9 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள வளர்ச்சி, நீங்கள் இன்றி சாத்தியமாகி இருக்காது. கரோனா சிரமங்களுக்கு மத்தியிலும் நமது நாடு உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்திருக்கிறது.
டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் உலகின் முதல் நாடாக இந்தியா உள்ளது. குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நமது கிராமப்புற பொருளாதாரம் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. நாடு தான் நமக்கு முதல்; மக்கள்தான் நமக்கு முதல். இதுதான் நமது மந்திரம்'' என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT