Published : 21 Apr 2023 06:55 AM
Last Updated : 21 Apr 2023 06:55 AM
புதுடெல்லி: போர், பொருளாதார நெருக்கடி, தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளுக்கு புத்தரின் போதனைகள் தீர்வை வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் சர்வதேச புத்தமத கூட்டமைப்பு சார்பில் உலக பவுத்தர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. புகழ்பெற்ற புத்த பிக்குகள், கல்வியாளர்கள், உலக நாடுகளின் தூதர்கள் என சுமார் 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். 2 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கடந்த நூற்றாண்டில் சில நாடுகள் பிறரைப் பற்றியும் எதிர்கால தலைமுறை பற்றியும் சிந்திப்பதை நிறுத்திவிட்டன. இதனால் உலக நாடுகள் இப்போது பருவநிலை மாற்ற நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. ‘எதிர்காலம் மற்றும் நிலைத்தன்மையின் பாதை' என்ற புத்தரின் போதனையை உலகம் பின்பற்றியிருந்தால், பருவநிலை மாற்ற நெருக்கடி ஏற்பட்டிருக்காது.
இப்போதைய சூழ்நிலையில், உலக நாடுகளும் பொதுமக்களும் தங்கள் சொந்த நலனுடன் உலக நலனுக்கும் முன்னுரிமை வழங்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. குறிப்பாக ஏழைகள் மற்றும் இயற்கை வளங்கள் குறைவாக உள்ள நாடுகள் பற்றியும் உலக நாடுகள் சிந்திக்க வேண்டும்.
இப்போது 2 நாடுகள் போரில் ஈடுபட்டுள்ளன. உலகம் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. தீவிரவாதம் மற்றும் மத தீவிரவாதம் மனிதகுலத்தின் ஆன்மாவை தாக்குகிறது. பருவநிலை மாற்ற நெருக்கடி மனிதகுலத்துக்கு சவாலாக விளங்குவதுடன், பனிப்பாறைகள் உருகுகின்றன. சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதுடன் சில உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இதுபோன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் புத்தரின் போதனைகள் தீர்வை வழங்குகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை புத்தர் காண்பித்த வழியைப் பின்பற்றி பிற நாடுகளுக்கு உதவி செய்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்நாட்டு மக்களின் துயரங்களை தங்களுடையதாகக் கருதி முடிந்த உதவிகளை மத்திய அரசு செய்தது.
புத்தரின் கருத்துகளை பிரச்சாரம் செய்யவும் குஜராத்தில் நான் பிறந்த வத் நகர் மற்றும் எனது மக்களவை தொகுதியான வாரணாசியுடன் பவுத்தம் கொண்டுள்ள ஆழமான தொடர்பை உயர்த்திக் காட்டவும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT