Published : 21 Apr 2023 07:10 AM
Last Updated : 21 Apr 2023 07:10 AM
புதுடெல்லி: சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. அந்த நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சூடான் அதிபராக ராணுவ தலைமை தளபதி அப்துல் பதா அல்-புர்கானும், துணை அதிபராக ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவப் படை தளபதி முகமது ஹம்தான் டகாலோவும் பதவி வகிக்கின்றனர். இந்த சூழலில் அதிபருக்கும், துணை அதிபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டுப் போர் வெடித்திருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக நடைபெறும் மோதலில் 330 பேர் உயிரிழந்துள்ளனர். 3,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சூடானின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருகிறது. இந்தியர்களை மீட்க உதவுவதாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் உறுதி அளித்துள்ளன.
இந்த சூழலில் சூடான் விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சூடானில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து இந்தியர்களை மீட்க சில திட்டங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கார்டூமில் அமைந்துள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படுகிறது. தற்போது தூதரக கட்டிடத்தில் ஊழியர்கள் இல்லை. எனினும் வெவ்வேறு இடங்களில் இருந்து அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முகாமிட்டுள்ளார். அங்கு ஐ.நா. பொதுச்செயலாளரை அவர் சந்தித்துப் பேசுவார். அப்போது சூடான் நிலவரம் குறித்து விவாதிக்கப்படும்.
சூடானில் உள்ள இந்தியர்களுக்காக மத்திய வெளியுறவுத் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை 1800 11 8797, 91-11-23012113, 91-11-23014104, 91-11-23017905, 91 9968291988 ஆகிய எண்கள் மற்றும் situationroom@mea.gov.in என்ற இ-மெயில் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT