Published : 20 Apr 2023 07:16 AM
Last Updated : 20 Apr 2023 07:16 AM
புதுடெல்லி: குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அது தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் ‘தேசிய குவாண்டம் மிஷன்’ (என்க்யூஎம்) திட்டத்துக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி 2023 முதல் 2031 வரையில் குவாண்டம் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஆண்டுகளில் இந்தியாவில் குவாண்டம் தொழில்நுட்பம் தொடர்பான செயல்பாடுகள் ஊக்கம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் குவாண்டம் தொழில்நுட்பம் தொடர்பாக தனியே திட்டம் உருவாக்கி செயல்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இது குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “குவாண்டம் தொழில்நுட்பமானது சுகாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, தகவல் பாதுகாப்பு என பலதுறைகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும். தேசிய குவாண்டம் மிஷன் இந்தியாவின் குவாண்டம் ஆராய்ச்சி செயல்பாடுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும்.
இத்திட்டத்தின் கீழ் குவாண்டம் கம்ப்யூட்டிங், குவாண்டம் கம்யூனிகேஷன், குவாண்டம் சென்சிங் மற்றும் மெட்ராலஜி, குவாண்டம் மெட்டீரியல் மற்றும் டிவைசஸ் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென இந்தியாவில் உள்ள முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களில் கட்டமைப்பு உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு..
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் இதில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தற்போது யு, ஏ, யுஏ என்ற பிரிவுகளில் தணிக்கைச் சான்று வழங்கப்படுகிறது. இனி தணிக்கைச் சான்றிதழை பார்வையாளர்களின் வயது அடிப்படையில் வழங்க இம்மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
இம்மசோதா குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “திரைத் துறையினருடன் கலந்தாலோசித்தும் உலக அளவில் கடைபிடிக்கப்படும் நடைமுறையின் அடிப்படையிலும் இந்த மசோதா உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த மசோதா திரைத் துறையினரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும். இந்த மசோதா குறித்து எவ்வித சர்ச்சையும் எழ வாய்ப்பில்லை. அனைத்துத் தரப்பினரையும் திருப்திபடுத்தக்கூடியதாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT