சூடான் வன்முறை | கர்நாடகாவை சேர்ந்த 31 பேரை மீட்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை கோரிக்கை

சூடான் வன்முறை | கர்நாடகாவை சேர்ந்த 31 பேரை மீட்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை கோரிக்கை
Updated on
1 min read

பெங்களூரு: சூடானில் வன்முறை வெடித்துள்ளதால் அங்கு சிக்கியுள்ள கர்நாடகாவை சேர்ந்த 31 பேரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்துள்ளார்.

சூடான் நாட்டில் ராணுவத்துக்கும் `ஆர்எஸ்எஃப்' என்ற துணை ராணுவ படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதில் ஒரு இந்தியரும் உயிரிழந்துள்ள‌தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, கர்நாடக மாநிலம் ஷிமோகா, மைசூரு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஹக்கி பிக்கி பழங்குடியினர் 31 பேர் வேலைக்காக சூடான் சென்றனர். அவர்கள் வன்முறை நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ளதால் அச்சத்தில் தவிக்கின்றனர். கடந்த 3 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவிப்பதாக தொலைபேசி மூலம் கர்நாடக பேரிடர் மேலாண்மைத் துறைக்கு அவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார். சூடானில் சிக்கியுள்ள 31 கர்நாடக பழங்குடியினரை பத்திரமாக மீட்குமாறு அதில் வலியுறுத்தியுள்ளார்.

அங்கு சிக்கியுள்ள பிரபு (31) என்பவரை பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அங்குள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி செயல்படுமாறு கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in