

புதுடெல்லி: பில்கிஸ் பானுவுக்கு இன்று நடந்தது நாளை வேறு ஒருவருக்கு நடக்கலாம் என குற்றவாளிகளை விடுவித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் அவரது கண்முன்பாக படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த 11 பேரையும் கடந்த ஆண்டு குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது.
இதை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதவிர மேலும் சிலர் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாக ரத்னா ஆகியோர் அடங்கியஅமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, “பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த தற்கான காரணத்தை குஜராத் அரசு தெரிவிக்க வேண்டும். இது கொடும் குற்றம் தொடர்பான வழக்கு என்பதால் பொதுமக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு முடிவு செய்திருக்க வேண்டும். இன்று பில்கிஸ் பானு வழக்கில் நடந்தது நாளை வேறு ஒருவருக்கு நடக்கலாம்.
அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். குற்றவாளிகளின் விடுதலைக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்றால், நாங்களே ஒரு முடிவுக்கு வருவோம்’’ என்றனர்.
இந்த வழக்கில், குற்றவாளிகளை விடுதலை செய்தது தொடர்பான அசல் கோப்புகளை தயாராக வைத்துக்கொள்ளுமாறு கடந்த மார்ச் 27-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மறு பரிசீலனை செய்யுமாறு மனு தாக்கல் செய்ய உள்ளோம் என்று மத்திய அரசும் குஜராத் அரசும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.