

சண்டிகர்: போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் கூட்டணி அமைத்து சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்ட பஞ்சாப் போலீஸ் அதிகாரி ராஜ் ஜித் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பஞ்சாபில் போதைப்பொருள் வர்த்தகத்தில் காவல் துறை அதிகாரிகளின் பங்கு குறித்து அப்போதைய டிஜிபி சட்டோபாத்யாயா தலைமையிலான எஸ்ஐடி சமர்ப்பித்த அறிக்கையை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் கூட்டணி வைத்து செயல்படும் காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பஞ்சாப் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் ஒருபகுதியாக, போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி ராஜ் ஜித் சிங்கை பணிநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (பிபிஎஸ்சி) அனுமதிபெற்ற பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கடத்தல் நடவடிக்கைகளுக்கு துணை போனதன் மூலம் அந்த அதிகாரி வாங்கி குவித்துள்ள சொத்துகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரம் விரைவில் வெளியாகும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
‘‘பஞ்சாப் மாநிலத்தில் முந்தைய அகாலிதளம்-பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சியின்போது போதைப்பொருள் வர்த்தகம் பெருமளவில் நடைபெற்றது. ஆனால் அந்த அரசுகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தற்போதைய ஆம் ஆத்மி அரசு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த உயர்பதவிகள் வகித்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரியதண்டனை பெற்றுத்தர உறுதிபூண்டுள்ளது’’ என்று பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
ராஜ் ஜித் சிங் கோடிக்கணக்கில் சொத்துகள் வாங்கி சேர்த்துள்ளது எஸ்ஐடி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.