பாஜக அணியில் இணைய முயற்சியா? - அஜித் பவார் திட்டவட்ட மறுப்பு

பாஜக அணியில் இணைய முயற்சியா? - அஜித் பவார் திட்டவட்ட மறுப்பு
Updated on
1 min read

மும்பை: தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தான் பாஜக அணியில் இணைய இருப்பதாக வெளியாகும் செய்தி உண்மையல்ல என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார். அக்கட்சியின் மூத்த தலைவரான இவர், மகாராஷ்டிராவின் துணை முதல்வராகவும் இருந்தவர். இந்நிலையில், அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தனியாக ஆலோசனை நடத்தியதாகவும், பாஜக அணியில் இணைய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது. இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், ''காரணமே இல்லாமல் வதந்தி பரப்பப்படுகிறது. நான் எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனை ஏதும் மேற்கொள்ளவில்லை. 40 எம்எல்ஏக்களிடம் நான் கையெழுத்தும் பெறவில்லை. எம்எல்ஏக்கள் என்னை சந்திப்பது வழக்கமானதுதான். அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கக் கூடாது. நான் தேசியவாத காங்கிரஸில்தான் இருக்கிறேன். தொடர்ந்து இதில்தான் இருப்பேன். கட்சியினருக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், நீங்கள் கவலைப்பட வேண்டாம். தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவின் ஆளும் கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ வருவதற்கு காலம் இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அஜித் பவார் பாஜக அணியில் இணைய உள்ளாரா என சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ''இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? நீங்கள் ஏன் அவரிடமே கேட்கக் கூடாது? அதுபற்றி எனக்குத் தெரியாது. பொதுத் தொண்டில் ஈடுபாடு உள்ள நபர் என்ற முறையில் எனக்கு நிறைய பணிகள் இருக்கின்றன. வதந்திகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை'' என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in