

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் எலாத்தூர் அருகே கடந்த 2-ம் தேதி இரவு ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். தப்பிக்கும் முயற்சியில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் பிறகு தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் ஷாரூக் சைபி என்பவரை மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் கேரள போலீஸார் கைது செய்தனர். ஷாரூக் சைபியை 11 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
விசாரணையில் குற்றத்தை ஷாரூக் சைபி ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் தீவிரவாத குற்றத்துக்காக ஷாரூக் சைபி மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் 16-வது பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவரும் கேரள காவல் துறை கூடுதல் இயக்குநருமான எம்.ஆர்.அஜித் குமார் நேற்று கூறியதாவது:
நாங்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆவணங்கள் மற்றும் அறிவியல்பூர்வ ஆதாரங்களை திரட்டினோம். வாக்குமூலங்கள் பெற்றோம். அவற்றின் அடிப்படையிலான விரிவான விசாரணையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்தோம்.
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் உள்ளிட்ட பலரின் அடிப்படைவாத வீடியோக்களை ஷாரூக் சைபி அடிக்கடி பார்த்து வந்துள்ளார். இதன் மூலம் அவர் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார். குற்றத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அதை நிறைவேற்ற அவர் கேரளா வந்துள்ளார். 27 வயதான ஷாரூக் சைபி, தேசிய திறந்தநிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார்.
அவரது குற்றம் தொடர்பான ஆதாரங்களை கண்டறிந்துள்ளோம். அவர் வேறு யாரிடமாவது ஏதேனும் உதவி பெற்றாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.