

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு மும்பையில் உள்ள பெஹந்தி பஜார் பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது.
போலீஸார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியவர்களை மீட்டுவருகின்றன.
வியாழக்கிழமைவரை இந்த விபத்துக்கு 15 பேர் பலியான நிலையில், இன்று பலி எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளதாகவும், நேற்றிரவிலிருந்து மட்டும் 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 24 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள், பிறந்து 20 நாளான குழந்தையும் அடங்கும்.
இடிந்து விழுந்த கட்டிடத்தில் 9 குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். மேலும், அங்கு குழந்தைகள் பள்ளி செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் கட்டிடம் இடிந்து விழுந்த போது, குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. அத்துடன் அந்தக் கட்டிடத்தில் 6 கிடங்குகளும் செயல்பட்டு வந்துள்ளன.
இந்தக் கட்டிடம் 100 ஆண்டு பழமையானது. தற்போது பெய்து வரும் கனமழையால் கட்டிடம் வலுவிழந்ததா என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்து வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் நேரில் சென்று பார்வையிட்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.